வேவு பார்ப்பதை முடுக்கிவிட்டுள்ள இஸ்‌ரேல், அமெரிக்கா அதிருப்தி

வேவு பார்ப்பதை முடுக்கிவிட்டுள்ள இஸ்‌ரேல், அமெரிக்கா அதிருப்தி

2 mins read
d519eba3-7c69-4c2e-9a4e-e047380acd1c
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் உளவு பார்த்துக்கொள்வதை நீண்டகாலமாக அறிந்து சகித்துக்கொண்ட போதிலும், ஈரானுடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்ள இஸ்ரேல் தற்போது எடுத்துள்ள தீவிர முயற்சி உளவுத்துறை எல்லைகளை மீறியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் பிரதிநிதிகளை இஸ்ரேலிய உளவு அமைப்புகள் உளவு பார்ப்பதாக வெளிவந்துள்ள அண்மைய உளவுத்துறை அறிக்கைகள் அமெரிக்கத் தற்காப்பு தலைமையகமான பென்டகனுக்குப் பெரிதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் உளவு பார்த்துக்கொள்வதை நீண்டகாலமாக அறிந்து சகித்துக்கொண்ட போதிலும், ஈரானுடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்ள இஸ்ரேல் தற்போது எடுத்துள்ள தீவிர முயற்சி உளவுத்துறை எல்லைகளை மீறியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.

அமெரிக்காவின் பேச்சுவார்த்தை தலைமை வல்லுநர் ஸ்டீவ் விட்காஃப், பென்டகனின் கொள்கை அதிகாரி எல்ப்ரிட்ஜ் ஏ. கோல்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளைக் குறிவைத்து இஸ்ரேல் இந்த உளவு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாக அந்த அறிக்கைகள் கூறுகின்றன.

தற்காப்பு உறவுப் பிரிவு வெளியிட்டுள்ள மற்றொரு முக்கிய அறிக்கையில், இஸ்ரேலால் அமெரிக்காவுக்கு ஏற்படும் உளவு அச்சுறுத்தல் அளவு ‘உயர்நிலை’ என்பதிலிருந்து மிக ஆபத்தான ‘நெருக்கடிநிலை’ என்ற உச்சக்கட்ட அளவுக்கு அண்மைய வாரங்களில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிரான கூட்டு ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு, முன்னெப்போதும் இல்லாத வகையில் உத்திபூர்வத் தகவல்களைப் பகிர்ந்து வரும் வேளையில் இந்த உளவு விவகாரம் வெடித்துள்ளது.

அதிபர் டிரம்ப்பின் அரசாங்கம் ஈரானுடன் அமைதி உடன்பாட்டை எட்ட முயலும் சூழலில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஈரானின் அணுசக்தித் திறன்களை முழுமையாக அழிக்கவும் ஹிஸ்புல்லா அமைப்பை ஒடுக்கவும் தீவிரமாக உள்ளார்.

இரு நாடுகளின் இந்த மாறுபட்ட கொள்கை அணுகுமுறையே இஸ்ரேலின் இந்த உளவு முயற்சிக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தத் தகவல்களை வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார்.

வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலியத் தூதரகத்தின் செய்தித்தொடர்பாளரும் இக்குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதுடன், அமெரிக்க அதிகாரிகளை இஸ்ரேல் உளவு பார்ப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவத் திட்டமிடல் மற்றும் தகவல் பகிர்வுகளில் பென்டகன் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என்பதால் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காஇஸ்‌ரேல்உளவு