வாஷிங்டன்: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நீடித்த அமைதியை ஏற்படுத்துவது பற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷாரிஃபுடன் தொலைபேசியில் உரையாடினார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இந்த வாரத் தொடக்கத்தில் நட்பு நாடான இஸ்ரேலுக்கும் அதன் வட்டார எதிரியான ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தத்தை அறிவித்தார். இம்மாதம் 13ஆம் தேதி இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் மூண்டது.
ஈரான் குறித்து கலந்துரையாட பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஃபீல்ட் மார்ஷல் அஸிம் முனீரைத் திரு டிரம்ப் வெள்ளை மாளிகையில் கடந்த வாரம் சந்தித்தார்.
வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் ஒரு பிரிவு ஈரானிய நலன்களைப் பாதுகாக்கிறது. ஈரான், அமெரிக்கா இடையே தூதரக உறவு இல்லை.
“இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான நீடித்த அமைதியை நிலைநாட்ட இணைந்து செயல்படுவது எவ்வளவு முக்கியம் என்பதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்,” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு சொன்னது.
ஈரானால் ஒருபோதும் அணுவாயுதத்தை உருவாக்கவோ வைத்திருக்கவோ முடியாது என்று திரு ரூபியோ வலியுறுத்தியதையும் அமைச்சு குறிப்பிட்டது.
2023 அக்டோபர் மாதம் காஸாவில் இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் - ஈரான் பூசல் வட்டாரத்தில் பதற்றநிலையை அதிகரித்துள்ளது.
ஈரானின் அணுவாயுதத் தளங்களைக் கடந்த வார இறுதியில் அமெரிக்கா தாக்கியதை அடுத்து கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் தாக்கியது.

