ஈரான்மீது பெருந்தாக்குதல் தொடுத்த இஸ்ரேல்

ஈரான்மீது பெருந்தாக்குதல் தொடுத்த இஸ்ரேல்

2 mins read
7638a5b5-54bd-48ae-b05a-56aa8e1c4ca6
ஈரான்மீது இஸ்ரேல் புதிய தாக்குதல் தொடுத்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

டெஹ்ரான்: ஈரான்மீது புதிய தாக்குதல்களைத் தொடுத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இம்முறை இன்னும் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டது.

ஈரான் நிபந்தனையின்றி சரணடைவது மட்டும்தான் போருக்கான முற்றுப்புள்ளி என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியதை அடுத்து இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றன.

இதற்கிடையே, இஸ்ரேல்மீதும் அண்டை வளைகுடா நாடுகள்மீதும் ஈரான் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.

தலைநகர் ரியாத்துக்கு அருகில் அமெரிக்க ராணுவப் படையினர் வசிக்கும் பிரின்ஸ் சுல்தான் ஆகாயப்படைத் தளபத்தியம்மீது ஈரான் பாய்ச்சிய ஏவுகணையை இடைமறித்ததாக சவூதி அரேபியா தெரிவித்தது.

ஈரானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம், தலைநகரின் மேற்குப் பகுதியில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதை உறுதிப்படுத்தியது. ஆனால், கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை.

கடந்த வாரம் 3,000க்கும் அதிகமான ஈரானியப் பகுதிகள் குறிவைத்துத் தாக்கப்பட்டதாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமெரிக்க மத்தியத் தளபத்தியம் சொன்னது.

அவற்றுள் ஈரானின் ராணுவத் தலைமையகம், தளபத்தியக் கட்டுப்பாட்டு நிலையங்கள், ஆகாயப்படைக் கட்டமைப்புகள், ஏவுகணைத் தளங்கள், கடற்படை கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவை அடங்கும்.

இதற்கிடையே, அமெரிக்கப் படைகள் குறித்த வேவுத் தகவல்களை ர‌ஷ்யா ஈரானுக்கு வழங்குவதாகக் கூறப்படுவது குறித்து எந்தக் கவலையும் இல்லை என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் படைகளின் நடமாட்டம் குறித்த தகவல்களை ர‌ஷ்யா உளவு பார்த்து ஈரானிடம் தெரிவிப்பதாக நம்பப்படுகிறது.

அத்தகைய தகவல்களை உறுதிப்படுத்த மறுத்த திரு ஹெக்செத், அனைத்தும் கண்காணிக்கப்படுவதாக சிபிஎஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலின்போது கூறினார்.

இருப்பினும், ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உடனடியாகச் சண்டையை நிறுத்தும்படி ஈரானிய அதிபர் மசூத் பெசெ‌ஷ்கியானிடம் தொலைபேசிவழி கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்