பெய்ரூட்: லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள், அமெரிக்காவும் ஈரானும் செய்துகொண்ட போர் நிறுத்த உடன்பாட்டை மீறும் செயல் என்று ஈரானியத் துணை வெளியுறவு அமைச்சர் சாயிட் காதிப்சாடே கூறியுள்ளார்.
லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிக் குழுவைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 203 பேர் மாண்டனர், 800க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்று லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்த உடன்பாட்டைத் தற்காலிகமாக எட்டியுள்ள நிலையிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதால் உடன்பாடு நிலைக்குமா என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
லெபனானில் உள்ள நூற்றுக்கும் அதிகமான ஹிஸ்புல்லா தளபத்திய நிலையங்கள், ராணுவத் தளங்கள் ஆகியவற்றின்மீது 10 நிமிடங்களுக்குள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஈரான் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு முழுமையாக இணங்கும்வரை அமெரிக்கப் படைகள் வட்டாரத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்படப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
ஈரான் அணுவாயுதங்களை முழுமையாகக் கைவிடவேண்டும் என்றும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவேண்டும் என்றும் உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, தேவைப்படும் நேரங்களில் இஸ்ரேல் ஹிஸ்புல்லாமீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என்று கூறினார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் தொடர்பில்லை என்று இஸ்ரேல் இதற்குமுன் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆனாலும் லெபனான்மீது இஸ்ரேல் தொடுக்கும் தாக்குதல் உடன்பாட்டை மீறுவதாக இருப்பதாய் ஈரான் சாடியது.
இஸ்ரேலியர்களுக்கு எதிராகச் செயல்படும் அனைவர்மீதும் குறிவைக்கப்படும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் திரு நெட்டன்யாகு சொன்னார்.
லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பிரிட்டன் கண்டனம் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தத்தை வரவேற்பதாகக் கூறிய பிரிட்டன் அது தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியது.

