டெஹ்ரான்: ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிப்பதைத் தடுக்க வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அதன் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஈரானின் பல பகுதிகளில் வெடிப்பு ஏற்பட்டதை அந்நாட்டு ஊடகங்களுடன் சம்பவங்களை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். ஈரானின் முக்கிய யுரேனிய செறிவூட்டு நிலையமும் (uranium enrichment facility) தாக்கப்பட்ட இடங்களில் அடங்கும்.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் ‘ரைசிங் லயன்’ என்று பெயர் சூட்டியது. ஈரானிய ராணுவப் படைத் தளபதிகள், ஏவுகணை ஆலைகளையும் ‘ரைசிங் லயன்’ குறிவைப்பததாக இஸ்ரேல் தெரிவித்தது.
பதில் நடவடிக்கையாக ஈரான் தன் மீது ஏவுகணை, வானூர்தித் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேல் அவசரநிலையை அறிவித்தது.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, “இஸ்ரேலின் வரலாற்றை நிர்ணயிக்கும் தருணத்தில் நாம் இருக்கிறோம்,” என்று பதிவு செய்யப்பட்ட காணொளிவழி கூறினார்.
அணுகுண்டைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த ஈரானிய விஞ்ஞானிகளையும் அந்நாட்டின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் மற்றும் நான்டான்ஸ் யுரேனிய செறிவூட்டு நிலையம் ஆகியவற்றையும் தாங்கள் குறிவைத்திருப்பதாக திரு நெட்டன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல்கள் பல நாள்கள் தொடரலாம் என்றும் அவர் சொன்னார்.
தலைநகர் டெஹ்ரானில் பலமுறை வெடிப்புச் சத்தம் கேட்டதாக ஈரானிய அரசாங்கத்துக்குச் சொந்தமான தொலைக்காட்சி தெரிவித்தது. அந்நாட்டின் ஆகாயத் தற்காப்பு முறை முழு விழிப்புநிலையில் இருந்ததாகவும் அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
பல அணுவாயுத, ராணுவப் பகுதிகளைத் தாங்கள் தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒரு நாளில் 15 அணுவாயுதங்களைத் தயாரிக்கத் தேவையான பொருள்கள் ஈரானிடம் இருப்பதாக அந்த அதிகாரி சொன்னார்.
இந்நடவடிக்கையை இஸ்ரேல் சுயமாக மேற்கொண்டது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க் ருபியோ தெரிவித்தார். தன்னைத் தற்காத்துக்கொள்ள இந்நடவடிக்கை அவசியம் என்று இஸ்ரேல் கருதுவது அதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் இருவர், ஈரான் மீதான தாக்குதல்களில் அமெரிக்கா ஈடுபடவில்லை என்றும் அவ்வட்டாரத்தில் அமெரிக்கப் படைகளைப் பாதுகாப்பதற்குத்தான் தாங்கள் முன்னுரிமை அளிப்பதாகவும் கூறினார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக சிஎன்என் ஊடகம் தெரிவித்துள்ளது.