ஜெரூசலம்: மே மாதம் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புதல் வழங்கிய பிறகும் இஸ்ரேல், ஹிஸ்புல்லா போராளிகளை வேட்டையாடுவதாகக் கூறி, லெபனானின் தென் வட்டாரங்களில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வந்தது.
லெபனானில் ஹிஸ்புல்லாப் படையை குறிவைத்து இஸ்ரேல் தாக்குவதை நிறுத்த வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியது. அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் செய்வதில் அதை ஒரு நிபந்தனையாகவும் ஈரான் முன்வைத்தது.
இந்நிலையில், முழு சண்டை நிறுத்தத்துக்கு இஸ்ரேல், லெபனான் இருநாடுகளும் உடன்படிக்கை ஒன்றை எட்டியுள்ளதாக புதன்கிழமை (ஜூன் 3) அமெரிக்கா அறிவித்துள்ளது.
அதன்வழியாக, அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான மத்திய கிழக்கு பூசல் ஒரு முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் அறிவிப்புக்கு முன்னதாக, ஈரான் குவைத்தின் விமான நிலையம் ஒன்றை தாக்கி சேதப்படுத்திய சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். ஹோர்முஸ் நீரிணை அருகில் அமெரிக்கப் படைகளும் ஈரானின் ராணுவத் தளவாடங்களைத் தாக்கியது.
ஹிஸ்புல்லாவின் நிலை
இஸ்ரேல், லெபனான் அமைதி உடன்படிக்கையின்படி, ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு, தென் லெபனானில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும்.
ஹிஸ்புல்லா வெளியேறிய இடங்களை லெபனானின் ராணுவம் அதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவேண்டும். இதன் விவரங்களை சண்டை நிறுத்தப் பேச்சுவாரத்தைகளை வாஷிங்டனில் தலைமையேற்று நடத்திய அமெரிக்க வெளியுறவு அமைச்சு அறிவித்தது.

