அக்டோபர் 7ஆம் தேதி நினைவுநாளை அனுசரிக்கும் இஸ்ரேல்

அக்டோபர் 7ஆம் தேதி நினைவுநாளை அனுசரிக்கும் இஸ்ரேல்

2 mins read
2fc000d7-00a0-4b3e-8f84-bc7bce7eae6b
இஸ்ரேலில் ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதல் முடிந்து ஓராண்டு ஆகிவிட்டதைக் குறிக்க அக்டோபர் 7ஆம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மாது. - படம்: ராய்ட்டர்ஸ்

ரி’இம், இஸ்ரேல்: ஹமாஸ் அமைப்பின் கொடூரமான தாக்குதல் நடந்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், இஸ்ரேல் அக்டோபர் 7ஆம் தேதி படுகொலை நடந்த இடங்களில் நினைவஞ்சலி செலுத்தியுள்ளது.

பிணைக்கைதிகள் ஒப்படைக்கப்படவேண்டும் என்று கோரி பேரணிகள் நடந்துள்ளன.

பாலஸ்தீனப் போராளிகள் நடத்திய தாக்குதலின் நினைவுநாளைக் குறிக்கும் விதமாக, இஸ்ரேலிலும் உலகில் உள்ள நகரங்களிலும் சடங்குகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்தத் தாக்குதலில் 1,205 பேர் உயிரிழந்தனர்.

உள்ளூர் நேரப்படி, காலை 6.29 மணிக்கு இஸ்ரேலிய அதிபர் ஐசாக் ஹெர்ஸொக் மௌன அஞ்சலி செலுத்தினார். அதே நேரத்தில்தான், நொவா இசை விழா நடைபெற்ற ‘கிபுட்ஸ் ரிஇம்’ இடத்தில் சென்ற ஆண்டின் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அங்குக் குறைந்தது 370 பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தார் நினைவஞ்சலியில் கலந்துகொண்டனர். திரு ஹெர்ஸொக் அங்கிருந்தவர்களைச் சந்தித்தார். அவர்களில் பலர் அழுதுகொண்டிருந்தனர்.

இதற்கிடையே, டெல் அவிவ் பகுதியில் பிணைக்கைதிகளின் குடும்பத்தாரும் ஆதரவாளர்களும் பதாகைகளை ஏந்தியவாறு பேரணி நடத்தி, தங்கள் அன்புக்குரியவர்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து சண்டையிட்டு, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராகப் புதிய போரில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்த ஓராண்டு நினைவுநாள் இடம்பெறுகிறது.

அதோடு, சென்ற வாரம் நடத்தப்பட்ட ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக தெஹ்ரானுக்கு எதிராகச் சண்டையிடவும் அது ஆயத்தமாகி வருகிறது.

இதனால் அந்த வட்டாரத்தில் முழுவீச்சில் போர் ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

காஸாவிலிருந்து ஏவுகணைகள்

நினைவஞ்சலி தொடங்கிய சில நிமிடங்களில் காஸாவிலிருந்து நான்கு ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

அவற்றில் மூன்றைத் தடுத்து நிறுத்தியதாகவும், மற்றோர் ஏவுகணை திறந்தவெளிப் பகுதியில் விழுந்ததாகவும் அது தெரிவித்தது.

இந்நிலையில், தனது போராளிகள் ‘ராஃபா’, ‘கிரெம் ஷலோம்’ எல்லைப் பகுதிகளிலும் ‘கிபுட்ஸ் ஹொலிட்’ பகுதியிலும் ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக ஹமாஸ் கூறியுள்ளது.

இதனிடையே, தனது எதிரிகளுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் உலகம் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று திரு ஹெர்ஸொக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்