பாலஸ்தீனத்துக்கு இஸ்ரேல் வழங்கவேண்டியவை:அனைத்துலக நீதிமன்ற விசாரணை

1 mins read
6cd2f294-d3ea-458c-a2fe-3db1ccbe699c
நெதர்லாந்தின் ஹெக் நகரில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம். - படம்:ஏஎஃப்பி

ஹெக்: மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் செய்யவேண்டியவை பற்றிய விசாரணையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அடுத்த மாதம் நடத்தவிருக்கிறது.

இம்மாதத் தொடக்கத்தில் காஸாவுக்குள் நுழையவிருந்த முதலுதவிகளை இஸ்ரேல் தடுத்ததையடுத்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் ஐக்கியநாடுகள் பொதுச் சபையில் பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் வழங்கவேண்டிய மனிதாபிமான உதவிகளைப் பற்றிய ஆலோசனையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் வழங்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் நார்வே முன்மொழிந்த இத்தீர்மானம் பெரும்பாலான நாடுகளின் ஆதரவைப் பெற்றது.

பாலஸ்தீனர்களின் உயிர்வாழ்விற்குத் தேவையான அனைத்து உணவுப் பொருள்களுடன் அத்தியாவசிய உபகரணங்களையும் எவ்விதத் தடையுமின்றி உடனடியாக அங்கு அனுப்பிவைப்பதற்கு இஸ்ரேல் என்ன செய்யவேண்டும் என்பதை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தெளிவுபடுத்தவேண்டும்.

அந்த நீதிமன்றத்தின் தீர்ப்புகள் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவற்றை நடைமுறைப்படுத்த உறுதியான வழிமுறைகள் இல்லை. ஆயினும் அத்தீர்ப்புகள் அனைத்துலக அளவில் அரசதந்திர அழுத்தங்களை உருவாக்கும் இயல்புடையதாகும்.

பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது சட்டவிரோதமான செயல் என்று அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலையில் ஆலோசனை வழங்கியது.

மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாலஸ்தீனத்தில் 2.4 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். சுமார் 15 மாதங்களாகத் தொடர்ந்த போருக்குப் பிறகு ஜனவரி 19 முதல் போர் நிறுத்தம் நடப்பில் உள்ளது. ஆனால் மார்ச் 2 முதல் அங்குள்ள காஸாவுக்குள் செல்லக்கூடிய அனைத்துலக உதவிகளை இஸ்ரேல் கட்டுப்படுத்திவருகிறது.

குறிப்புச் சொற்கள்