காஸாவிலிருந்து 4 பிணைக்கைதிகளை மீட்ட இஸ்‌ரேல்

காஸாவிலிருந்து 4 பிணைக்கைதிகளை மீட்ட இஸ்‌ரேல்

2 mins read
இஸ்‌ரேலிய நடவடிக்கையால் பாலஸ்தீனர்கள் 210 பேர் கொல்லப்பட்டனர்: ஹமாஸ்
ceb114c4-d848-4a7d-99d3-550f00e46428
ஹமாசால் பிணை பிடிக்கப்பட்டு எட்டு மாதங்களுக்குப் பிறகு ஜூன் 8ஆம் தேதி மீட்கப்பட்ட (இடம்) நோவா அர்காமானி, அல்மோக் மெய்ர் ஜான். - படங்கள்: இஸ்ரேலியத் தற்காப்புப் படை/எக்ஸ் தளம்
multi-img1 of 4

கெய்ரோ: இஸ்‌ரேலியப் படையினர், கடந்த அக்டோபரில் ஹமாஸ் தரப்பினரால் பிணை பிடிக்கப்பட்ட நால்வரை ஜூன் 8ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கை மூலம் மீட்டுள்ளனர்.

26 வயது நோவா அர்காமானி, 22 வயது அல்மோக் மெய்ர் ஜான், 27 வயது ஆண்ட் ரே கோஸ்லோவ், 41 வயது ஷ்லோமி ஸிவ் ஆகியோர் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

காஸாவில் இதன் பொருட்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த எட்டு மாதங்களில் இஸ்ரேல் நடத்திய ஆகக் கடுமையான தாக்குதல்களில் இதுவும் ஒன்று எனக் கருதப்படுகிறது.

காஸாவின் மத்திய பகுதியில் உள்ள அல்- நுசைரத்தில் பிணையாளிகள் மீட்பு நடவடிக்கையைத் தொடர்ந்து வான்வழித் தாக்குதலையும் இஸ்ரேல் நடத்தியது.

குடியிருப்பாளர் பகுதியில் இரண்டு அடுக்குமாடி வீடுகளில் பிணையாளிகளை ஹமாஸ் போராளிகள் தடுத்து வைத்திருந்ததாகவும் அந்தப் பகுதியைக் குறிவைத்து சிறப்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இஸ்‌ரேலிய ராணுவப் பேச்சாளர் கூறினார்.

இஸ்‌ரேலியப் படையினர் கடுமையான தாக்குதலை எதிர்கொண்டதாகவும் அதற்குப் பதிலடியாக தரையிலிருந்தும் வான்வழியாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி குறிப்பிட்டார்.

“100க்குக் குறைவானோர் (பாலஸ்தீனர்கள்) உயிரிழந்ததாகத் தெரிகிறது. அவர்களில் எத்தனை பேர் பயங்கரவாதிகள் என்று எனக்குத் தெரியாது,” என்றார் அவர்.

இஸ்ரேலிய சிறப்புப் படைத் தளபதி ஒருவர் இந்த நடவடிக்கையின்போது கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

சந்தை, பள்ளிவாசல் ஆகியவற்றுக்கு அருகே, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனக் குடியிருப்பாளர்களின் சடலங்கள் சிதைந்த நிலையில் காணப்படுவதாக காஸாவில் உள்ள மருத்துவ உதவியாளர்கள் கூறுகின்றனர்.

மீட்கப்பட்ட பிணையாளிகள் நால்வரும் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அவர்கள் அனைவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இசை நிகழ்ச்சி ஒன்றிலிருந்து அவர்கள் நால்வரும் ஹமாஸ் தரப்பினரால் பிணையாளிகளாகக் கடத்திச் செல்லப்பட்டனர். எட்டு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்