ஹமாஸ் போராளிகளைத் தடுத்து நிறுத்தியதாக இஸ்‌ரேல் கூறுகிறது

ஹமாஸ் போராளிகளைத் தடுத்து நிறுத்தியதாக இஸ்‌ரேல் கூறுகிறது

1 mins read
f3c629cc-f8fe-483b-88ef-962c68dc79c6
இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர் ஒருவரின் சடலம் ஜெனின் பகுதியில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

ரமல்லா, மேற்குக் கரை: ஜெனின் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஒளிந்துகொண்டு, தாக்குதல் நடத்த திட்டமிட்டுக்கொண்டிருந்த ஹமாஸ் போராளிகளை தனது படையினர் தடுத்து நிறுத்தியுள்ளதாக இஸ்‌ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

இஸ்ரேலிய ராணுவம் அந்தப் போராளிகளில் ஒருவரை முகம்மது ஜலாம்னே, 27, என்று அடையாளம் கண்டது. ஜலாம்னே, வெளிநாட்டில் உள்ள ஹமாஸ் தலைமையகத்துடன் தொடர்பில் இருந்ததாகவும், திடீர் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் அது கூறியது.

எஞ்சிய இரண்டு போராளிகள் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அது சொன்னது.

“ஜலாம்னெ விரைவில் தீவிரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்டு, மருத்துவமனையை மறைவிடமாகப் பயன்படுத்தினார். அதனால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்,” என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

அந்த ஆடவர்களின் அடையாளங்களை பாலஸ்தீனம் உறுதிப்படுத்தவில்லை.

மூன்று ஆடவர்களும் கொல்லப்பட்டார்களா என்பதை இஸ்ரேலிய ராணுவம் சொல்ல மறுத்தது. இருப்பினும் மூன்று பாலஸ்தீனர்கள் மருத்துவமனையில் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன வானொலி தெரிவித்தது.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி நடந்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்‌ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே காஸா போர் தொடங்கியது.

அப்போதிலிருந்து மேற்குக் கரையில் வன்செயல்கள் அதிகரித்து வந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்