தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேச்சுவார்த்தைக்குப் பேராளர் குழுவைக் கத்தாருக்கு அனுப்பும் இஸ்‌ரேல்

2 mins read
b5364c46-fbdb-4200-af4c-0323dca09851
ஜூலை 4ஆம் தேதியன்று காஸா முனையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தாக்குதலிலிருந்து தப்பிக்க பாலஸ்தீனப் பெண்ணும் அவரது மகளும் ஓடி ஒளிகின்றனர். - படம்: ஏஎஃப்பி

ஜெருசலம்: காஸா பிணைக்கைதிகள், போர் நிறுத்தம் ஆகியவை தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட தனது பேராளர் குழுவைக் கத்தாருக்கு இஸ்‌ரேல் அனுப்பிவைக்கிறது.

பேராளர் குழு கத்தாருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) செல்கிறது.

போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பான பரிந்துரைகள் சிலவற்றை மாற்றியமைக்க வேண்டும் என்று ஹமாஸ் கோரிக்கை விடுத்திருந்தது.

ஆனால், ஹமாஸ் போராளி அமைப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்திருந்தார்.

இப்படி இருந்தும், பேச்சுவார்த்தையில் பங்கெடுக்க இஸ்‌ரேல் போராளர் குழு கத்தாருக்குச் செல்கிறது.

60 நாள் போர் நிறுத்த உடன்படிக்கையை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நிபந்தனைகளுக்கும் இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

இதையடுத்து, பரிந்துரைகள் குறித்து ஜூலை 4ஆம் தேதியன்று ஆக்கபூர்வமாகப் பதிலளித்ததாக ஹமாஸ் கூறியது.

இந்நிலையில், காஸாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிநிலை குறித்து ஹமாஸ் கவலை தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை (ஜூலை 7) அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை பிரதமர் நெட்டன்யாகு சந்திக்க இருக்கிறார்.

ஆயுதம் ஏந்தி போராடும் முறையை ஹமாஸ் கைவிட வேண்டும் என்று பிரதமர் நெட்டன்யாகு வலியுறுத்தி வருகிறார்.

ஹமாசின் பிடியில் உள்ள பிணைக்கைதிகளில் சிலர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. விடுவிக்கப்படாதவர்களில் 20 பேர் மட்டுமே உயிருடன் இருக்கின்றனர் என்று நம்பப்படுகிறது.

ஹூதிப் படைக்கு எச்சரிக்கை

இஸ்‌ரேலை நோக்கி ஏமனிலிருந்து பாய்ச்சப்பட்ட ஏவுகணையைச் சுட்டு வீழ்த்தியதாக இஸ்‌ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்‌ரேலுக்கு எதிரான தாக்குதல்களை ஹூதிப் படை தொடர்ந்தால் அதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் சென்றடைய பயன்படுத்தப்படும் கடல்வழி, ஆகாயவழிப் பாதைகள் முற்றுகையிடப்படும் என்றும் இஸ்‌ரேல் எச்சரிக்கை விடுத்தது.

ஈரானின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹூதிப் படை, காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தது.

2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காஸா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் மற்றும் செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்களை நோக்கி பல ஏவுகணைகளை இஸ்ரேல் பாய்ச்சியுள்ளது.

இதனால் உலகளாவிய வர்த்தகம் தடைப்பட்டது.

ஹூதிப் படைகள் பாய்ச்சிய பெரும்பாலான எவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் சுட்டு வீழ்த்திவிட்டதாக இஸ்‌ரேல் தெரிவித்தது.

அத்துடன், ஹூதிப் படைகளுக்கு எதிராக இஸ்ரேல் பதிலடித் தாக்குதல்களையும் மேற்கொண்டது.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்ஹமாஸ்கத்தார்