தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிரியா மீது தாக்குதல் நடத்திய இஸ்‌ரேல்

2 mins read
352e5320-a54f-4ecf-b534-2c387467882b
இஸ்‌ரேல் நடத்திய தாக்குதலில் சிரியாவில் உள்ள கட்டடங்கள் சேதமடைந்தன. - படம்: ராய்ட்டர்ஸ்

கெய்ரோ: சிரியா மீது இஸ்‌ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

தென்சிரியாவில் இருந்த ஆயுதக் கிடங்கு தகர்க்கப்பட்டதாக இஸ்‌ரேல் கூறியது.

செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 3) சிரியாவிலிருந்து இரண்டு ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதை அடுத்து, சிரியா மீது இஸ்‌ரேல் இருமுறை தாக்குதல் நடத்திவிட்டது.

இஸ்‌ரேல் மீது யார் ஏவுகணைகளைப் பாய்ச்சினர் என்பது இன்னும் தெரியவில்லை.

தலைநகர் டமாஸ்கசின் புறநகர்ப் பகுதிகள் உட்பட வேறு சில பகுதிகளிலும் இஸ்‌ரேல் தாக்தகுதல் நடத்தியதாக சிரியா அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் தெரிவித்தது.

கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து சிரியா மீது இஸ்‌ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்‌ரேல் மீது இரண்டு ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதற்கு சிரியா அதிபர் அல் ஷாராதான் காரணம் என்று இஸ்‌ரேலியத் தற்காப்பு அமைச்சர் இஸ்‌ரேல் கட்ஸ் கூறினார்.

“இஸ்‌ரேலுக்கு எதிரான மிரட்டல்களுக்கு சிரியா அதிபர்தான் நேரடிக் காரணம். பதிலடி விரைவில் தரப்படும்,” என்றார் திரு கட்ஸ்.

இதற்கிடையே, மத்தியக் கிழக்கில் எந்த நாட்டிற்கும் சிரியா மிரட்டலாக இருக்காது என்று சிரியா வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

“தங்கள் சொந்த லாபத்திற்காக மத்தியக் கிழக்கில் குழப்பத்தை விளைவிப்பவர்கள் உள்ளனர் என்று எங்களுக்குத் தெரியும்,” என்றும் அது கூறியது.

இருநாடுகளுக்கு இடையிலான பதற்றநிலையைக் குறைக்க சிரியாவும் இஸ்‌ரேலும் அண்மையில் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக. பகை நாடுகளாக இருந்து வரும் சிரியா மற்றும் இஸ்‌ரேல், பேச்சுவார்த்தை நடத்தியதற்கு உலகளாவிய நிலையில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், சிரியாவிலிருந்து பாய்ச்சப்பட்ட ஏவுகணைகள் இஸ்‌ரேலில் உள்ள திறந்தவெளிகளில் விழுந்ததாக இஸ்‌ரேலிய ராணுவம் தெரிவித்தது.

அதிகம் தெரியாத அமைப்பு ஒன்று ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக பல அரபு, பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால் இந்தத் தகவல் எவ்வளவு தூரத்துக்கு உண்மை என்பது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் உறுதி செய்ய முடியவில்லை.

குறிப்புச் சொற்கள்