ஜெருசலம்: காஸாவின் கான் யூனிஸ் பகுதியிலிருந்து தற்காலிகமாக வெளியேறுமாறு பாலஸ்தீனர்களிடம் இஸ்ரேலிய ராணுவம் வலியுறுத்தியுள்ளது.
அவ்வாறு செய்வதன் மூலம் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான தாக்குதல்களைத் தீவிரப்படுத்த முடியும் என்று அது ஜூலை 27ஆம் தேதியன்று கூறியது.
அல் மவாசியில் அமைக்கப்பட்டுள்ள துயர்துடைப்பு நிலையத்துக்குச் செல்ல பாலஸ்தீனர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
2023ஆம் ஆண்டு அக்டோர் 7ஆம் தேதியன்று ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,000க்கும் மேற்பட்டோரைக் கொன்று பலரைப் பிடித்துச் சென்று பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர்.
இதையடுத்து, காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதில் குறைந்தது 39,000 பாலஸ்தீனர்கள் மாண்டுவிட்டதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இந்நிலையில், கான் யூனிஸ் பகுதியில் ஹமாஸ் போராளிகளுடன் கடுமையான சண்டையில் ஈடுபட்டதாக இஸ்ரேலிய ராணுவம் ஜூலை 26ஆம் தேதியன்று கூறியது.
ஹமாஸ் அமைப்புக்குச் சொந்தமான சுரங்கப்பாதைகள், உள்கட்டமைப்புகள் ஆகியவற்றை இஸ்ரேலிய ராணுவம் அழித்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஜூலை 27ஆம் தேதி அதிகாலையிலிருந்து நடத்தப்படும் தாக்குதலில் இதுவரை குறைந்தது 14 பாலஸ்தீனர்களை இஸ்ரேலிய ராணுவம் கொன்றுவிட்டதாக பாலஸ்தீன ஊடகம் கூறியது.
மாண்டோரின் சடலங்கள் நசர் மருத்துவ நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஹமாஸ் உட்பட மற்ற பாலஸ்தீன அமைப்புகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 14,000 போராளிகளைக் கொன்றுவிட்டதாக அல்லது சிறை பிடித்துவிட்டதாக இஸ்ரேல் கூறியது.