காஸாவில் ஆறு பிணைக் கைதிகளின் சடலங்கள் கண்டெடுப்பு

2 mins read
06b879f1-a4cf-432e-b3b2-9487b21527fe
ஹெர்ஷ் கோல்டுபர்க்-பொலினை மீட்டு, அவரை இஸ்‌ரேலுக்குப் பத்திரமாகக் கொண்டு வரும்படி ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று அவரது படத்தைக் கொண்ட பதாகையை ஏந்தி இஸ்‌ரேலிய அரசாங்கத்தை அவரது பெற்றோர் கேட்டுக்கொண்டனர். இந்நிலையில், கோல்டுபர்க்-பொலினின் சடலம் காஸாவில் உள்ள சுரங்கப்பாதையில் கண்டெடுக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

ஜெருசலம்: ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்‌ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது.

அதில் கிட்டத்தட்ட 1,200 பேர் மாண்டனர்.

ஏறத்தாழ 250 பேரை ஹமாஸ் போராளிகள் பிணை பிடித்தனர்.

இதற்கிடையே, அந்தப் பிணைக் கைதிகளில் ஆறு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செப்டம்பர் 1ஆம் தேதியன்று இஸ்‌ரேல் தெரிவித்தது.

அந்தப் பிணைக் கைதிகளின் பிணங்கள் காஸாவின் தென்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் இருந்ததாக இஸ்‌ரேலிய ராணுவம் கூறியது.

“பிணைக் கைதிகள் இருந்த இடத்தை நாங்கள் சென்றடைவதற்குக் கொஞ்ச நேரம் முன்னதாக ஹமாஸ் போராளிகள் அவர்களை ஈவிரக்கமின்றி கொன்றிருக்கக்கூடும் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று இஸ்‌ரேலிய ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார்.

கார்மெல் காட், ஹெர்ஷ் கோல்டுபர்க்-பொலின், ஈடன் யெருஷால்மி, அலெக்சாண்டர் லொபனோவ், ஆல்மோக் சருசி, ஒரி டனினோ ஆகியோரின் சடலங்கள் ராஃபாவில் நிலத்துக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதையில் கண்டெடுக்கப்பட்டன.

சடலங்கள் இஸ்‌ரேலுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

“இந்த ஆறு பேரின் மரணம் இஸ்ரேலியர்களின் மனதைச் சுக்குநூறாக உடைத்துவிட்டது. மாண்டோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களைக் காப்பாற்றி இஸ்‌ரேலுக்கு உயிருடன் கொண்டு வர தவறிவிட்டோம். அதற்காக அவர்களது குடும்பங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்று இஸ்‌ரேலிய அதிபர் ஐசாக் ஹோர்ஸோக் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.

சண்டைநிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட மறுத்த இஸ்ரேல் மரணங்களுக்குப் பொறுப்பு என்று ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.

இந்நிலையில், மாண்ட பிணைக் கைதிகளில் கோல்டுபர்க்-பொலின் இஸ்‌ரேல், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்றவர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.

கோல்டுபர்க்-பொலினுக்கு ஏற்பட்ட நிலை தம்மை மீளாத் துயரில் ஆழ்த்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமை தமக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து காஸாவில் மூண்ட போரில் இதுவரை குறைந்தது 40,691 பாலஸ்தீனர்கள் மாண்டுவிட்டனர்.

போரின் காரணமாக ஏறத்தாழ 94,060 பேர் காயமடைந்தனர்.

குறிப்புச் சொற்கள்