பாரிஸ்: பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின், துருக்கி உள்ளிட்ட பல உலக நாடுகள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேற்குக் கரையில் உள்ள நிலப்பரப்புகளை இஸ்ரேல் மேலும் ஆக்கிரமிப்பு செய்யத் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. அதை எதிர்த்து இப்போது நாடுகள் குரல் கொடுத்துள்ளன.
“பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் சட்டவிரோதமாகக் குடியிருப்புகளை அமைத்துவருகிறது. நிலப்பரப்பில் மாற்றங்கள் இருப்பதைக் காணமுடிகிறது,” என்ற உலக நாடுகள் கூட்டறிக்கையை துருக்கியின் வெளியுறவு அமைச்சு திங்கட்கிழமை (பிப்ர[Ϟ]வரி 23) வெளியிட்டது.
“அனைத்துலகச் சட்டத்தை மீறும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது,” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சவூதி அரேபியா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகளும் அரபு கூட்டமைப்பின் தலைவர்களும், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பும் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டன.
இம்மாதம் 15ஆம் தேதி இஸ்ரேலின் அமைச்சரவை மேற்குக் கரையில் அதன் ஆதிக்கத்தை அதிகரிக்க ஒப்புதல் வழங்கியது. இதன்மூலம் மேற்குக் கரையில் இஸ்ரேலியர்கள் நிலம் வாங்கவும் பாலஸ்தீனர்களை வெளியேற்றவும் அது உதவும்.
பாலஸ்தீனத்தின் ஒருபகுதியாகப் பார்க்கப்படும் மேற்குக்கரையின் பெரும்பாலான பகுதிகள் இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
மேற்குக்கரையில் சில பகுதிகளை நிர்வாகம் செய்யும் பாலஸ்தீன ஆணையத்திற்கு அங்குக் குறைவான அதிகாரம் மட்டுமே உள்ளது.

