கெய்ரோ: இஸ்ரேலிய அரசாங்கம் 600க்கும் மேற்பட்ட பாலஸ்தீனக் கைதிகளின் விடுதலையைக் காலவரையின்றித் தாமதப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இதனால், காஸா போர்நிறுத்த நடைமுறையில் மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஹமாஸ் உத்தரவாதமளித்த அடுத்தக் கட்ட பிணைக்கைதிகளையும் ஒப்படைக்கும் வரை பாலஸ்தீனர்களை விடுவிப்பது தாமதப்படுத்தப்படும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அறிவித்துள்ளார்.
கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின்போது கடத்தப்பட்ட நால்வர் உட்பட ஆறு இஸ்ரேலிய பிணைக்கைதிகளை ஹமாஸ் சனிக்கிழமை விடுவித்த பின்னர் அவரது கருத்து வெளியானது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின்படி இன்னும் ஒரே ஒரு பிணைக்கைதி ஒப்படைப்பு நடைபெற வேண்டியுள்ளது. இதில், உயிரிழந்த நான்கு பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
போர் நிறுத்தத்தின் இரண்டாவது கட்டமாக நடைபெறவுள்ள எஞ்சிய பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான எந்த ஏற்பாடுகளும் இதுவரை செய்யப்படவில்லை.
இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்துவிடாமல் இருக்க சமரசப் பேச்சாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் நெட்டன்யாகு, ஹமாஸ் மீண்டும் விதிமுறைகளை மீறியதாகவும் பிரசார நோக்கங்களுக்காக பிணைக்கைதிகள் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
நோவா இசை நிகழ்ச்சியின்போது சிறைபிடிக்கப்பட்ட நான்கு பிணைக்கைதிகளான தல் ஷோஹாம், ஓமர் ஷெம் டோவ், எலியா கோஹன் மற்றும் ஓமர் வெங்கர்ட் ஆகியோர் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
அவெரா மெங்கிஸ்டு, ஹிஷாம் அல்-சயாத் ஆகிய இதர இரண்டு பேர் காஸா சிறையில் பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டவர்கள்.
முதல் கட்டத்தில் கடைசியாக விடுவிக்கப்பட்ட வேண்டிய மேற்குறிப்பிட்ட ஆறு பிணைக்கைதிகள் உயிரோடு உள்ளவர்கள். இந்த ஒப்படைப்பு நடவடிக்கைகள் அடுத்த சனிக்கிழமைக்குள் நடைபெற வேண்டியுள்ளது.
இதற்கிடையே, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஆஃபெர் சிறைக்கு வெளியே, பாலஸ்தீன கைதிகளின் விடுதலைக்காக அவர்களது குடும்பத்தினரும் நண்பர்களும் காத்திருந்தனர்.
காஸாவின் கான் யூனிஸில் வசிக்கும் 80 வயதான தாயார், தனது மகன் 33 வருட சிறைவாசத்திற்குப் பிறகு விடுவிக்கப்படுவார் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
ஆனால் பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவதை இஸ்ரேல் தாமதப்படுத்தியிருப்பதால் அவர் ஏமாற்றமடைந்தார்.
பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படாததால் இஸ்ரேஸ் ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக ஹமாஸ் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
நெட்டன்யாகுவின் கருத்துக்கு ஹமாஸிடமிருந்து உடனடியாக பதில் எதுவும் வெளியாகவில்லை.