பெய்ரூட்: லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 550 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் இருப்பிடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
20 ஆண்டுகளாக இரு தரப்புக்கும் இடையே நடந்து வரும் பூசலில் இந்த தாக்குதல் நடவடிக்கை ஆக மோசமான ஒன்று என்று கூறப்படுகிறது.
இஸ்ரேலிய தாக்குதலில் இருந்து தப்பிக்க ஆயிரத்திற்கும் அதிகமான லெபனான் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாறியுள்ளனர்.
இஸ்ரேல் 1,300க்கும் அதிகமான ஹிஸ்புல்லா அமைப்பினரின் இருப்பிடங்களை அழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடி தரும் விதமாக ஹிஸ்புல்லா 200க்கும் அதிகமான ராக்கெட்டுகளை இஸ்ரேலின் வடக்குபகுதியில் பாய்ச்சியுள்ளது. இதில் இருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த பதற்றமான சூழல் முழுமையான போராக மாறக்கூடும் என்று உலக நாடுகள் அச்சம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 50 குழந்தைகள், 58 பெண்கள் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 1,538 பேர் காயமடைந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
தாக்குதலில் பொதுமக்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர், எத்தனை ஹிஸ்புல்லா போராளிகள் மாண்டனர் என்பது பற்றிய விவரங்களை லெபனான் வெளியிடவில்லை.
ஓராண்டுக்கு முன்னர் ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி தரும் விதமாக காஸாமீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
காஸா மக்களுக்கு ஆதரவு தருவதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் எல்லையில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தனர். இஸ்ரேல் காஸாவில் சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் ஹிஸ்புல்லா கூறிவந்தது.
எல்லையில் ஹிஸ்புல்லாவின் தாக்குதல் நடவடிக்கை அதிகரித்ததை தொடர்ந்து தற்போது இஸ்ரேல் லெபனானின் பல பகுதிகளில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

