ஈரான் இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஈரான் இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 mins read
அமெரிக்காவின் பேச்சுவார்த்தை முன்மொழிவை டெஹ்ரான் நிராகரித்தது
bde40edf-3a4c-4059-9d87-da9ba089812e
மார்ச் 26ஆம் தேதி அன்று, தெற்கு லெபனானின் கஃபார் ரூமானே கிராமத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் நடந்த இடத்தில் முதலுதவிப் பணியாளர்கள் காணப்படுகின்றனர். - படம்: ஏஎஃப்பி

டெஹ்ரான்: கிட்டத்தட்ட நான்கு வாரங்களாக நீடித்துவரும் மத்திய கிழக்குப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளை டெஹ்ரான் நிராகரித்து, தனது ‘எதிர்ப்பைத்’ தொடரப்போவதாகச் சூளுரைத்ததைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (மார்ச் 26) அன்று ஈரான் முழுவதும் இஸ்ரேல் புதிய இலக்குகளைத் தாக்கியது.

மத்திய கிழக்கின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கும் அளவுக்குப் பெரிதாக வளர்ந்துள்ள, ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரைப் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நம்பிக்கை, அமெரிக்கா டெஹ்ரானிடம் பரிந்துரைத்த 15 அம்ச சமாதானத் திட்டத்தை டெஹ்ரான் நிராகரித்ததை அடுத்து முடிவுக்கு வந்துள்ளது.

ஆனால், ஈரானின் உயர்மட்டத் தூதர், மார்ச் 25 அன்று இரவு, அதிபர் டோனல்ட் டிரம்பின் நிர்வாகத்துடன் எந்தவிதமான ‘பேச்சுவார்த்தையும்’ நடைபெறவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். ‘நட்பு நாடுகள்’ மூலம் செய்திகள் பரிமாறப்பட்டு வருவதை மட்டும் அவர் ஒப்புக்கொண்டார்.

“தற்சமயம், எதிர்ப்பைத் தொடர்வதே எங்கள் கொள்கை,” என்று வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அரசு தொலைக்காட்சியில் கூறினார். மேலும், “நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை. இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிப்ரவரி 28 அன்று போரைத் தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேலியக் கூட்டுத் தாக்குதலுக்குப் பிறகு, ஏறக்குறைய தினசரி குண்டுவீச்சுக்கு உள்ளாகி வந்த ஈரான், மார்ச் 26ஆம் தேதி அன்று அதிகாலையில், உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்ட ‘பரந்த அளவிலான’ தாக்குதல்களுக்கு உள்ளானது என்று இஸ்ரேலிய ராணுவம் குறிப்பிட்டது.

இஸ்பஹான் மற்றும் ஷிராஸ் ஆகிய மத்திய நகரங்களிலும், தெற்கில் உள்ள பந்தர் அப்பாஸ், வடமேற்கில் உள்ள தப்ரிஸ், வடகிழக்கில் உள்ள மஷ்ஹத் ஆகிய இடங்களிலும் தாக்குதல்கள் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த மஷ்ஹத் பகுதி இதுவரை பெரும்பாலும் தப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்குப் பதிலடியாக, ஈரான், இஸ்ரேல் மீதான தனது தாக்குதல்களையும் தொடர்ந்தது. இதில், இஸ்ரேலின் மையப்பகுதியில் நடந்த ஏவுகணைத் தாக்குதல்களில் ஆறு பேர் லேசான காயமடைந்ததாக மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

சண்டை நிற்பதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், மார்ச் 26 அன்று நடந்த சண்டையில் இஸ்ரேலிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டதால் தெற்கு லெபனானில், ராணுவம் ‘ஓர் உண்மையான பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கியுள்ளது,” என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறினார்.

இதற்கிடையில், இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைகள் ‘சரணடைவதற்குச்’ சமம் என்று அதன் தலைவர் நயீம் காசிம் கூறியதைத் தொடர்ந்து, ஹிஸ்புல்லா மார்ச் 26ஆம் தேதி அதிகாலையில் மத்திய இஸ்ரேலில் உள்ள ராணுவத் தளங்கள் மீது புதிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது என்று ஏஎஃப்பி கூறியது.

குறிப்புச் சொற்கள்