பெய்ரூட்:லெபனானின் தென்பகுதியில் இருக்கும் மருந்தகம் ஒன்றின்மீது இஸ்ரேல், தாக்குதல் நடத்தியது.
அதில், அங்குப் பணியாற்றிய பன்னிரெண்டு மருத்துவப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டுச் சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமையன்று (மார்ச் 14) தெரிவித்தனர்.
ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர், இஸ்ரேலுடன் போரிடத் தாங்கள் தயாராக இருப்பதாக மார்ச் 13ஆம் தேதி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடந்தப்பட்டதாகக் கூறப்பட்டது. அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலில் ஈரானியத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, ஹிஸ்புல்லா அமைப்பு கடந்த வாரம் இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியது.
அச்சம்பவம், நடந்துவரும் மத்திய கிழக்கு போருக்குள் லெபனானும் இழுக்கப்பட்டதற்குக் காரணமாக அமைந்தது.
இதற்கிடையே, புர்ஜ் கலாவியா நகரில் உள்ள மருந்தகம்மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, சவானே நகரில் இஸ்ரேல் நடத்திய மற்றொரு தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த இரு மருத்துவ உதவியாளர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், மார்ச் 13ஆம் தேதி லெபனானின் சாராரியே, டெய்ர் ஃபால்சே ஆகிய நகரங்களுக்கு இடையே உள்ள லிட்டானி ஆற்றின் குறுக்கே இருந்த பாலத்தை இஸ்ரேல் தகர்த்தது.

