தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேலின் மருத்துவமனையைத் தாக்கிய ஈரான்

2 mins read
d0782a86-06cc-44e0-beb6-83301d2acc96
ஈரானின் ஏவுகணைகளில் ஒன்று இஸ்ரேலின் சோரோக்கா மருத்துவமனையில் விழுந்தது. அதில் குறைந்தது 47 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

டெல் அவிவ்: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தாக்குதல்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன.

வியாழக்கிழமை (ஜூலை 19) காலை இஸ்ரேலியத் தலைநகர் டெல் அவிவ் மற்றும் அதன் தென் பகுதியிலும் ஈரான் ஆகாயத் தாக்குதல் நடத்தியது. அதில் 10க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் நகருக்குள் விழுந்ததாகக் கூறப்பட்டது.

ஏவுகணைகளில் ஒன்று பீர்ஷெபாவில் உள்ள சோரோக்கா மருத்துவமனையில் விழுந்தது. அதில் குறைந்தது 47 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஏவுகணைத் தாக்குதலில் தப்பிக்க பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்போது மேலும் 17 பேர் காயமடைந்தனர்.

மருத்துவமனைமீது தாக்குதல் நடத்திய ஈரானிய பயங்கரவாதிகளுக்குக் கடுமையான பதிலடி தரப்படும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு சூளுரைத்துள்ளார்.

இஸ்ரேலின் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஈரான்மீதான தாக்குதல்களை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார்.

“ஈரானின் தாக்குதலில் மருத்துவமனை சேதமடைந்துள்ளது. மற்ற சில பகுதிகளும் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாரும் சோரோக்கா மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம். காயமடைந்தவர்களுக்கு உதவி வருகிறோம்,” என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு அதன் ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டது.

தாக்குதலுக்குள்ளான மருத்துவமனை காஸாவில் காயமடைந்த இஸ்ரேலியப் போர் வீரர்களுக்குச் சிகிச்சையளிக்கும் நிலையமாகச் செயல்பட்டது.

ஏவுகணைத் தாக்குதல் காரணமாக வியாழக்கிழமை காலை முதலே இஸ்ரேலின் முக்கியப் பகுதிகளில் எச்சரிக்கை ஒலி ஒலித்ததாக ஏஎஃப்பி செய்தியாளர்கள் கூறினர்.

டெல் அவிவ், ஜெருசலம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சத்தம் கேட்டதாகக் கூறப்பட்டது. சில முக்கிய கட்டடங்கள் தாக்குதலில் சேதமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

டெல் அவிவ்வில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே ஏவுகணைகள் விழுந்தன. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று இஸ்ரேலிய அவசரச் சேவை கூறியது.

இஸ்ரேலும் ஈரானும் ஜூன் 13ஆம் தேதி முதல் ஒன்றை ஒன்று மாறிமாறி தாக்கிவருகின்றன. இதனால் மத்தியக் கிழக்கு வட்டாரம் பெரும் பதற்றத்தில் உள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான இந்த மோதல் முழுப் போராக மாறாமல் இருக்க உலக நாடுகள் பல வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்