ஜெருசலம்: ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) தெரிவித்தது.
அந்தத் தாக்குதல் காரணமாக டெல் அவிவ் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் வான் தாக்குதல் குறித்த எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதாகவும் அது கூறியது.
இருப்பினும், ஏவுகணை இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி ‘டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ ஊடகம் கூறியது.
முன்னதாக, இஸ்ரேலின் ராணுவ உள்கட்டமைப்புகளை, தான் குறிவைத்துள்ளதாக ஹிஸ்புல்லா கூறியிருந்தது. குறிப்பாக, இஸ்ரேலின் வடக்குத் துறைமுக நகரான ஹைஃபா மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும் அது குறிப்பிட்டது.
இஸ்ரேல் குறிப்பிட்டிருக்கும் தாக்குதலைத்தான் ஹிஸ்புல்லாவும் கூறியிருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
வியாழக்கிழமை மாலை வடக்கு இஸ்ரேலை நோக்கிச் செலுத்தப்பட்ட 10 ஹிஸ்புல்லா உந்துகணைகளை ராணுவம் உடனடியாக முறியடித்துவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.
புதன்கிழமை (ஏப்ரல் 8) லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பழிதீர்க்கும் நோக்குடன், ஈரானிய ஆதரவுப் படையான ஹிஸ்புல்லா களமிறங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இருவாரப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள வேளையில், இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதல் நீடிக்கிறது.

