டெல் அவிவ்: ஹமாஸ் போராளிகளால் பிணைக் கைதியாக காஸாவுக்குப் பிடித்துச் செல்லப்பட்ட தாய்லாந்து நாட்டு ஆடவரின் சடலத்தை இஸ்ரேலிய ராணுவம் மீட்டுள்ளது.
நட்டாபோங் பின்டா என்ற அந்த ஆடவர் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் படையால் கடத்தப்பட்டார்.
பின்டாவின் சிதைந்த உடலை மீட்டுள்ளதாக இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் சனிக்கிழமை (ஜூன் 7) உறுதிப்படுத்தினார்.
பின்டாவின் சடலத்தைப் பாலஸ்தீனக் கிளர்ச்சிக் குழுவான முஜாந்தீன் போராளிகளிடமிருந்து கைப்பற்றியதாகத் திரு காட்ஸ் தெரிவித்தார்.
காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள ராஃபாவில் சிறப்பு ராணுவ நடவடிக்கை மேற்கொண்டபோது பின்டாவின் சடலத்தை மீட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பின்டாவின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட பின்டா ஒரு விவசாயி, அவர் இஸ்ரேல்-காஸா எல்லையில் அமைந்துள்ள கிப்புட்ஸ் நிர் ஆஸ் என்ற சிறிய பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார்.
பின்டா உயிருடன் கடத்தப்பட்டு பின்னர் கொடூரமாக ஹமாஸ் படையால் கொல்லப்பட்டார் என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்த வாரத்தில் பிணைக் கைதிகளான இரண்டு இஸ்ரேலிய அமெரிக்கர்கள் சடலத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் படையால் 251 பேர் கடத்தப்பட்டனர். அவர்களில் இன்னும் 55 பேர் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளனர். அதில் குறைந்தது 20 பேர் உயிருடன் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.