தோஹா: கத்தாரில் ஹமாஸ் தலைவர்கள்மீது செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து புதன்கிழமை (செப்டம்பர் 10) தாம் முழு அறிக்கை வெளியிடவுள்ளதாகவும் அவர் கூறினார்.
“இதுபற்றி நான் மகிழ்ச்சியாக இல்லை, இது ஒரு நல்ல நிலைமை இல்லை. பிணைக்கைதிகள் திரும்பி வரவேண்டும் என்று நாங்கள் விரும்பினாலும், தாக்குதல் நடந்த விதம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை,” என்று திரு டிரம்ப் கூறினார்.
கத்தாரில் தாக்குவதற்கான முடிவு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவால் எடுக்கப்பட்டது என்று சொன்ன திரு டிரம்ப், அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நலன்களை முன்னெடுக்காத ஒருதலைப்பட்சமான தாக்குதல் இது என்றார். இந்தத் தாக்குதல் மூலம் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கையை மத்திய கிழக்கில் அதிகரித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையில் கத்தார் சமரசம் செய்து வந்த சமாதான பேச்சுவார்த்தைகளை இஸ்ரேலின் தாக்குதல்கள் சீர்குலைப்பதாக கத்தார் பிரதமர் ஷேக் முகம்மது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி கருத்துரைத்தார்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, கத்தார் அமீருடன் தொலைபேசியில் பேசியதாகக் கூறிய திரு டிரம்ப், “கத்தார் மண்ணில் இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடக்காது,” என்று அவரிடம் உறுதியளித்ததாகச் சொன்னார்.

