துபாய்: ஹமாஸ், சிரியா, ஹிஸ்புல்லா ஆகியவற்றை முறியடிப்பதில் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் கவனம் ஈரான் பக்கம் திரும்பி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
2025 புத்தாண்டில் தனது பரம எதிரியான ஈரானை தன்வசப்படுத்துவது இஸ்ரேலின் நோக்கமாக இருக்கும்.
காஸாவில் ராணுவக் கட்டுப்பாட்டை நெருக்குவது, ஈரானின் அணுசக்திக் கனவை ஒழிப்பது, தெஹ்ரானின் நட்புநாடுகளைக் கலைப்பதில் கவனம் போன்ற தமது உத்திபூர்வ இலக்குகளில் நெட்டன்யாகு வெற்றி கண்டுள்ளார்.
ஈரானின் நட்புப் படைகளான பாலஸ்தீனத்தின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா போன்றவற்றை வெல்வதில் ஆதிக்கம் செலுத்தியதோடு சிரியா அதிபர் பதவியில் இருந்து பஷார் அல் அசாத்தைத் துரத்தியதும் நெட்டன்யாகுவின் உத்திகளாகக் கருதப்படுகின்றன.
பல்லாண்டுகளாக தெஹ்ரான் வளர்த்துவிட்ட நட்புப் படைகள் சிதறிவிட்டன.
ஈரானின் செல்வாக்கு இப்படி படிப்படியாக வலுவிழந்ததும் அந்த வட்டாரத்தில் இஸ்ரேலின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
ஈரானின் அணுவாயுதத் திட்டத்தையும் ஏவுகணைத் திட்டத்தையும் ஒழிப்பதில் நெட்டன்யாகு முழுமூச்சுடன் கவனம் செலுத்தி வருகிறார்.
அதனால், ஈரான்வசம் இரு தெரிவுகள் உள்ளதாக மத்திய கிழக்கு நிலவரத்தைக் கவனித்து வரும் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அணுவாயுதச் செயல் திட்டத்தைத் தொடருவது அல்லது அந்த நடவடிக்கைகளைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்வது ஆகியன அந்த இரு தெரிவுகள் என்கின்றனர் அவர்கள்.
“இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்காகக்கூடிய நிலையில் ஈரான் உள்ளது. குறிப்பாக, அதன் அணுவாயுதத் திட்டத்துக்கு ஆபத்து உள்ளது,” என்று அனைத்துலக நெருக்கடி நிலை கண்காணிப்புக் குழுவின் மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்கா திட்ட இயக்குநரான ஜூஸ்ட் ஆர். ஹில்டர்மன் கூறியுள்ளார்.
“ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அதில் வியப்படைய ஒன்றுமில்லை. இருப்பினும், ஈரானை இஸ்ரேல் முற்றிலுமாக ஒழித்துவிட இயலாது,” என்றார் அவர்.
பாலஸ்தீன பகுப்பாய்வாளரான கஸ்ஸான் அல் காத்திப் கூறுகையில், “அவர்கள் (ஈரானியர்கள்) அடிபணியவில்லை எனில் (அமெரிக்க அதிபராக இருக்கும்) டிரம்ப்பும் நெட்டன்யாகுவும் ஈரான் மீதான படையெடுப்புக்கு உத்தரவிடுவார்கள்,” என்றார்.
காரணம், இப்போதைக்கு அவ்விருவரையும் தடுக்கும் சக்தி எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், அப்படிப்பட்ட நிலை ஏற்படும்போது ராணுவப் படையெடுப்பைத் தவிர்க்க ஈரானிய தலைமைத்துவம் சமரசத்துக்கு முன்வரக்கூடும் என்றார்.