அராட்: இரண்டு ஈரானிய ஏவுகணைகள், இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள அராட் நகரை சனிக்கிழமை (மார்ச் 21) தாக்கியதில் 100 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அதற்குப் பதிலடியாக ஈரானை ‘அனைத்து முனைகளிலிருந்தும்’ தீவிரமாகத் தாக்கப்போவதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு சூளுரைத்தார்.
கடந்த மூன்று வாரங்களாகத் தொடரும் மத்திய கிழக்குப் போரில் இதுவே இஸ்ரேலில் பெருஞ்சேதத்தை விளைவித்த ஈரானின் மிகப்பெரிய தாக்குதலாகும்.
தாக்குதலுக்கு உள்ளான நகரின் குடியிருப்புகளில் இருந்த முகப்புகள் பிளக்கப்பட்டு, தரையில் ஆழமான குழிகள் ஏற்பட்டுள்ளன.
அராட் நகரில் 88 பேர் காயமுற்று அவர்களில் 10 பேர் மோசமான நிலையில் உள்ளனர். அருகில் உள்ள டிமோனா நகரில் பத்து வயதுச் சிறுவன் உட்பட 33 பேர் காயமடைந்துள்ளனர்.
டிமோனா நகரில்தான் இஸ்ரேலின் அணுவாயுக் கிடங்கு இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இஸ்ரேல் அதனை இன்றுவரை உறுதிப்படுத்தியதில்லை.
ஈரானின் நடன்ஸ் பகுதியில் உள்ள ஓர் அணுவாலையை இஸ்ரேல் தாக்கியதற்கான பதில் நடவடிக்கை இது என்று ஈரான் குறிப்பிட்டுள்ளது.
நடன்ஸ் ஆலை தாக்கப்பட்ட பிறகு, ஐக்கிய நாட்டு அணுவாயுதக் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் ரஃபெல் குரோஸி அணுவாயுதக் கசிவு போன்ற விபத்துகள் நேராமல் இருக்கும்படி இருநாடுகளின் ராணுவங்களையும் மீண்டும் கேட்டுக்கொண்டார்.

