இஸ்‌ரேல்-ஹிஸ்புல்லா போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு

2 mins read
478472c0-1f51-4090-84c4-95346b5f63bd
போர் நிறுத்தத்துக்கான அறிகுறிகள் தென்பட்டாலும் லெபனானியத் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இஸ்‌ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. - படம்: ஏஎஃப்பி

பெய்ரூட்: இஸ்‌ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோனும் அறிவிக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகவலை லெபனானைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நால்வர் நவம்பர் 25ஆம் தேதியன்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

போர் நிறுத்தத்தை நெருங்கிவிட்டதாகத் தெரிவித்தார் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புப் பிரிவின் செய்தி்த்தொடர்பாளர் ஜான் கிர்பி.

ஆனால் போர் நிறுத்தம் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படும் வரை எதையும் சொல்ல முடியாது என்று அவர் கூறினார்.

போர் நிறுத்தம் தொடர்பான கலந்துரையாடல்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரெஞ்சு அதிபர் மாளிகை குறிப்பிட்டது.

ஹிஸ்புல்லாவுடனான போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் வழங்க இஸ்‌ரேலிய அமைச்சரவை நவம்பர் 26ஆம் தேதி கூடும் என்று இஸ்‌ரேலைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போர் நிறுத்தத்துக்கான அறிகுறிகள் தென்பட்டாலும் லெபனானியத் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இஸ்‌ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து இஸ்‌ரேலியப் பிரதமர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டாலும் லெபனானின் தெற்குப் பகுதி மீது தாக்குதல் நடத்தும் உரிமையை இஸ்‌ரேல் தக்கவைத்துக்கொள்ளும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான இஸ்ரேலியத் தூதர் திரு டேனி டனோன் கூறினார்.

இதை ஏற்கப்போவதில்லை என்று லெபனான் இதற்கு முன்பு தெரிவித்திருந்தது.

போர் நிறுத்தம் தொடர்பாக இருதரப்புக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் பேரளவில் குறைந்துவிட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறினார்.

ஆனால் போர் நிறுத்தத்தை எட்ட, மேலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்