தடை செய்யப்பட்ட பகுதியில் புகைபிடித்த விவகாரம்: மலேசிய அமைச்சருக்கு அபராதம்

2 mins read
86b56609-f892-4fca-b53f-4d01966544db
வெளியுறவு அமைச்சர் முஹமட் ஹசன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். - கோப்புப் படம்: மலேசிய ஊடகம்

பெட்டாலிங் ஜெயா: மலேசிய வெளியுறவு அமைச்சர் முஹமட் ஹசன், தடை செய்யப்பட்ட பகுதியில் புகைபிடித்ததற்காக எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டு அபராதம் விதிக்கப்படவிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பில் வெளியுறவு அமைச்சின் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் சுல்கிஃப்லி அஹமட் டிசம்பர் 18ஆம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தார்.

“திரு முஹமட், தான் செய்த குற்றத்திற்காக அபராதம் விதிக்க வேண்டும் என்று தாமாகவே முன்வந்து சுகாதார அமைச்சை கேட்டுக் கொண்டார்,” என்றும் அப்பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

டிசம்பர் 18ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய திரு முஹமட், சிரம்பான் மாவட்ட சுகாதார அலுவலகத்திலிருந்து தமக்கு கடிதம் வந்துள்ளதாகவும் அபராதம் எவ்வளவு என்பது இன்னமும் தெரியவில்லை என்றும் கூறினார்.

“இந்தச் சம்பவம், பொதுமக்களிடையே ஒரு கவலையாகவும் அக்கறைக்குரிய அம்சமாகவும் மாறியிருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்,” என்றார் அவர்.

“நான் அபராதம் கட்டத் தயாராக இருக்கிறேன். அது அதிகமாக இருக்காது என நம்புகிறேன்,” என்றும் திரு அஹமட் சொன்னார்.

டிசம்பர் 17ஆம் தேதியன்று அமைச்சர் முகமட் போன்ற ஒருவர், உணவகம் ஒன்றில் ஒரு குழுவினருடன் அமர்ந்து சிகரெட்டை கையில் பிடித்துக் கொண்டிருப்பதைக் காட்டும் புகைப்படம் சமூக ஊடகத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர்கள் புகைபிடித்த இடம் சிகரெட் பிடிக்க தடை செய்யப்பட்ட இடம் என்பதையும் சமூக ஊடகப் பதிவு சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த நிலையில் யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர் என்றும் தனது அமைச்சு குற்றத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் சுகாதார அமைச்சர் சுல்கிஃப்லி வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்