பிலிப்பீன்ஸ் படகு விபத்தில் மாண்டோரின் உடல்களை அடையாளம் காண சில மாதங்கள் ஆகலாம்

பிலிப்பீன்ஸ் படகு விபத்தில் மாண்டோரின் உடல்களை அடையாளம் காண சில மாதங்கள் ஆகலாம்

1 mins read
15f684a3-820b-42de-b45a-7f7acdc27103
செப்டம்பர் 9ஆம் தேதி மாலையில் ‘எம்/வி ஜூன் ஆஸ்டர்’ எனும் பயணிகள் கப்பலில் பெருந்தீ மூண்டது. - படம்: ஏஎஃப்பி

கோரோன்: பிலிப்பீன்சில் 76 பேரை பலிகொண்ட படகுத் தீவிபத்தில் கருகிய உடல்களை அடையாளம் காண சில மாதங்கள் ஆகலாம் என ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிலிப்பீன்சின் மிக மோசமான கடல்சார்ந்த பேரழிவுகளுள் ஒன்றான இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய தீவிரமாக விசாரணை நடந்துவரும் நிலையில், தடயவியல் நிபுணர்கள் கருகிய உடல்களிலிருந்து மரபணு (டிஎன்ஏ) மாதிரிகளைச் சேகரித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்டோரின் ரத்த உறவுகளோடு அந்த மாதிரிகளை ஒப்பிட்டுப் பார்க்கும் பரிசோதனையை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

130க்கும் அதிகமான பயணிகளுடன் மணிலாவிலிருந்து பாலவான் பகுதியிலுள்ள கோரோன் நகரை நோக்கிச் சென்றபோது, அந்தப் படகில் தீப்பற்றியது.

படகின் சில பகுதிகளில் பலரின் உடற்பாகங்கள் சிக்கியிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் சிலரின் உடற்பாகங்கள் கப்பலின் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடந்ததாகவும் பிலிப்பீன்ஸ் தேசியக் காவல்துறையின் தடயவியல் நிபுணர் ரிச்சர்ட் ஆலன் மங்கலிப் தெரிவித்தார்.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், “மீட்கப்பட்ட பெரும்பாலானோரின் உடல்கள் கருகிய நிலையில் உள்ளன. பரிசோதிக்கப்பட வேண்டிய மரபணு மாதிரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், உடல்களை அடையாளம் காண்பதற்கான உறுதியான காலவரையறையை வழங்க இயலாது,” என்றார்.

மீட்புக் குழுவினர் படகிலிருந்து மேலும் 41 உடல்களை மீட்டதைத் தொடர்ந்து, பலியானோரின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்தது; 13 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
பிலிப்பீன்ஸ்படகுவிபத்து