பெர்லின்: டென்மார்க் பிரதமர் மெட்டா ஃபிரெடரிக்சன், ஐரோப்பாவுடன் அமெரிக்கா தொடர்ந்து நட்பு நாடாக இருக்குமா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்து அமெரிக்காவுக்கும் டென்மார்க்கிற்கும் இடையில் பதற்றம் நிலவுகிறது.
“அமெரிக்காவில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை,” என்று திருவாட்டி ஃபிரெடரிக்சன் கூறினார். ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள டென்மார்க் தூதரகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) நடைபெற்ற கேள்வி-பதில் அங்கத்தின்போது அவர் அதனைத் தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களில் நடந்த நிகழ்வுகள், பழைய உலக ஒழுங்குநிலை இப்போது இல்லை என்பதையே காட்டுகின்றன என்றார் திருவாட்டி ஃபிரெடரிக்சன். டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தின் உரிமையைப் பெறப் பொருளியல் அல்லது ராணுவ பலத்தைப் பயன்படுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டியிருந்தார்.
கெடுபிடிப்போரின்போதும் அதற்குப் பின்னரும் ஐரோப்பாவுக்கு ராணுவ உத்தரவாதத்தைக் கொடுத்து வருகிறது அமெரிக்கா. இப்போது கிரீன்லாந்து விவகாரத்தில் அதனை எப்படிச் சமாளிப்பது என்பதை ஐரோப்பா தொடர்ந்து விவாதித்து வருகிறது.
கிரீன்லாந்து விவகாரம், ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் பிளவை ஏற்படுத்திவிட்டதா என்று செய்தியாளர்கள் மீண்டும் மீண்டும் திருவாட்டி ஃபிரெடரிக்சனைக் கேட்டார்கள்.
அந்த விவகாரத்தில் ஐரோப்பாவின் ஒற்றுமையைப் பாராட்டுவதாக அவர் பதில் தந்தார். அதே நேரம் அமெரிக்காவிடமிருந்து விலகி ஐரோப்பா சுதந்திரமாகச் செயல்படுவதற்குக் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் டென்மார்க் பிரதமர் அழைப்பு விடுத்தார். ஐரோப்பிய நாடுகள் ராணுவச் செலவினத்தை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 2030ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு நாடும் தத்தம் தற்காப்புக்கு முழுப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்றும் திருவாட்டி ஃபிரெடரிக்சன் வலியுறுத்தினார்.
திரு டிரம்ப்பையோ அமெரிக்காவையோ எதிரி என்று அவர் குறிப்பிடவில்லை. ஆனால் அமெரிக்கா, டென்மார்க்கை இக்கட்டான, சிரமமான நிலைக்குத் தள்ளியிருப்பதாகத் திருவாட்டி ஃபிரெடரிக்சன் குறிப்பிட்டார்.

