பேங்காக்: தாய்லாந்தின் பிடிஎஸ் ரயிலில் தகராறில் ஈடுபட்ட ஐந்து இத்தாலிய மாணவர்களும் அவர்களின் மேற்பார்வையாளரும் சனிக்கிழமை (ஜூலை 25) சுக்ரஸ் என்று அழைக்கப்படும் தாய்லாந்துப் பெண்ணிடம் காவல் நிலையத்தில் மன்னிப்பு கேட்டனர்.
இந்தக் குழுவைச் சேர்ந்த ஐந்து பேருக்குக் காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
இரு தரப்பினரும் இந்தப் பிரச்சினையை இத்தோடு முடித்துக் கொள்ளவும் ஒருவருக்கொருவர் எதிராக இனி எந்தவிதச் சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் ஒப்புக்கொண்டனர்.
ரயிலில் அந்தக் குழுவினர் உரத்த குரலில் பேசியதும் பொருத்தமற்ற முறையில் நடந்து கொண்டதும்தான் இந்தச் சம்பவத்தின் தொடக்கமாகும்.
அப்போது சுக்ரஸ் தலையிட்டு நல்ல முறையில் எடுத்துக் கூறியபோது, அவமரியாதையான பேச்சு, நடுவிரலைக் காட்டுவது உள்ளிட்ட ஆபாசச் சைகைகள் காட்டப்பட்டன.
அந்த வாக்குவாதத்தில், “நாங்கள் உங்கள் நாட்டிற்குப் பணத்தைக் கொண்டு வந்ததற்காக மன்னிக்கவும்,” என்று கூறப்பட்டதாகத் தெரிகிறது.
இது, தாய்லாந்து சமூக ஊடகப் பயனர்களிடையே பரவலான கோபத்தைத் தூண்டியது.
அதனைத் தொடர்ந்து சுக்ரஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணை அதிகாரிகள் அந்தக் குழுவைச் சேர்ந்த ஆறு பேரையும் ஒரு மொழிபெயர்ப்பாளருடன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு சுக்ரசைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையின்போது, அந்த மாணவர்களும் அவர்களின் மேற்பார்வையாளரும் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தனர்.
அத்துடன் தங்களின் நடவடிக்கை தவறானது என்பதை ஒப்புக்கொண்டு, மனதார மன்னிப்பும் கேட்டனர்.
இத்தாலியக் குழுவைச் சேர்ந்த சிவப்பு நிற ஆடை அணிந்திருந்த ஒரு பெண், “நான் உங்களிடமும் உங்கள் குடும்பத்தினரிடமும் தாய்லாந்து மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்று கூறினார்.
மற்றவர்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். இரு தரப்பினரும் தங்களது கைப்பேசியில் வைத்திருந்த அல்லது சமூக ஊடகங்களில் பதிவிட்ட புகைப்படங்களையும் காணொளிகளையும் அகற்ற ஒப்புக்கொண்டனர்.
காவல்துறையினர், அறுவரில் ஐவருக்கு அவமதித்த குற்றத்திற்காக தலா 1,000 பாட் (சிங்கப்பூர் $38) அபராதம் விதித்தனர்.

