வெலிங்டன்: நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசின்டா ஆர்டென், பதவி விலகிய மூன்றாண்டுகளுக்குப் பிறகு வரவிருக்கும் தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றப் போராடும் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு திரட்டத் தொடங்கியுள்ளார்.
தமது அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், தொழிலாளர் கட்சியின் தற்போதைய தலைவர் கிறிஸ் ஹிப்கின்சுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள திருவாட்டி ஆர்டென், அவரது தேர்தல் பிரசாரத்துக்கு நிதி வழங்குமாறு வாக்காளர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
நவம்பர் மாதம் 7ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியான தேசியக் கட்சியும் முதன்மை எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் வாக்காளர்களைக் கவரத் தீவிரமாகப் போராடி வரும் சூழலில், திருவாட்டி ஆர்டெனின் இந்த ஆதரவு மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக வெளிவந்த கருத்துக் கணிப்புகளில், இரு முக்கியக் கட்சிகளுக்கான ஆதரவு சரிந்து வருவதாகவும் நாட்டின் வளர்ச்சிக்குத் தனித்துவமான பார்வைகளை முன்வைக்கும் சிறிய கட்சிகளை நோக்கி வாக்காளர்கள் ஈர்க்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
2017ஆம் ஆண்டு, தமது 37வது வயதில் தொழிலாளர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற மூன்றே மாதங்களுக்குள் நாட்டின் பிரதமரான திருவாட்டி ஆர்டென், உலகின் மிக இளைய பெண் தலைவர் எனும் பெருமையைப் பெற்றார்.
அதைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவுக்குப் பிறகு, பதவியில் இருக்கும்போதே குழந்தையைப் பெற்றெடுத்த இரண்டாவது உலகத் தலைவர் என்ற சிறப்பையும் அவர் அடைந்தார்.
