லண்டன்: பிரிட்டனின் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (ஜேஆர்எல்), செலவுகளைக் குறைக்கவும் சந்தைப் போட்டியை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகளவில் கிட்டத்தட்ட 4,000 வேலைவாய்ப்புகளைக் குறைக்கவுள்ளதாகத் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) தெரிவித்துள்ளது.
மத்திய இங்கிலாந்தில் முக்கிய உற்பத்தி மையங்களைக் கொண்ட நிறுவனம், 1.7 பில்லியன் பவுண்ட் செலவைச் சேமிக்கவும் தனது விற்பனை இழப்பற்ற நிலையை 300,000 வாகனங்கள் என்ற அளவுக்குக் கொண்டுவரவும் இலக்கு வைத்துள்ளதாகக் கூறியுள்ளது.
ஜேஎல்ஆர் நிறுவனம் உலகளவில் கொண்டுள்ள கிட்டத்தட்ட 40,000 ஊழியர்களில் 30,000 பேர் இங்கிலாந்தில் பணியாற்றுகின்றனர்.
இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஜேஎல்ஆர், வேலைவாய்ப்புக் குறைப்பை உறுதிசெய்தது.
அடுத்த 12 மாதங்களில் ஐந்து புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் மின்மயமாக்கல், மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள், மேம்பட்ட உற்பத்தி முறை, மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் பவுண்ட் முதல் 18 பில்லியன் பவுண்ட் வரையிலான முதலீட்டிற்கு அந்த மாற்றங்கள் உறுதுணையாக இருக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்புக் குறைப்பு குறித்து ஊடகங்களில் வெளியான அறிக்கைகளைத் தொடர்ந்து, அதுகுறித்து ஆலோசிக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பி.பி. பாலாஜியை இந்த வாரம் சந்திக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் ஜானத்தன் ரெனால்ட்ஸ் இதற்குமுன் கூறியிருந்தார்.


