முதியவரைத் தாக்கிய பணிப்பெண்ணுக்குச் சிறை

1 mins read
28125038-6da9-47f1-b4d1-de3580d4ac73
படம்: - தமிழ் முரசு

முதலாளியின் முதிய தாயாரைத் தாக்கிய பணிப்பெண்ணுக்கு 12 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

85 வயதான அந்தத் தாயார் கடுமையான மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர் என்றும் பேசுவதற்குச் சிரமப்படுபவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பணிப்பெண் தாக்கியதில் அம்முதியவருக்குக் கையில் காயங்கள் ஏற்பட்டன.

இச்சம்பவம் கடந்த மார்ச் மாதம் பிடோக் ரிசர்வாயர் ரோட்டில் உள்ள வீட்டில் நடந்தது.

பணிப்பெண் இண்டா நூர் வாஹ்யூனியின் தாக்குதல் எவ்விதத்திலும் தூண்டப்பட்டது அல்ல என்றும் முதலாளி அவரை நன்கு நடத்தியபோதும் அவர் அவ்வாறு நடந்துகொண்டார் என்றும் அரசாங்கத் தரப்பு கூறியது.

இந்தோனீசியாவைச் சேர்ந்த 35 வயதான இண்டா, முதியவரைத் தாக்கியதற்கு எந்தவொரு காரணத்தையும் கொடுக்கவில்லை. இதன் தொடர்பில் ஒரு குற்றச்சாட்டை செவ்வாய்க்கிழமை அவர் ஒப்புக்கொண்டார்.

மார்ச் 6ஆம் தேதி இரவு மணி 7.53இலிருந்து 8.01வரை இண்டா தமது தாயாரைத் துன்புறுத்திய காட்சிகளை மூதாட்டியின் மகள் கண்காணிப்புக் கேமராப் பதிவின் மூலம் கண்டார்.

பணிப்பெண் தனது கையால் முதியவரின் கையில் அடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மகள் காவல்துறையிடம் புகார் செய்த பிறகு ஆகஸ்ட் 29ஆம் தேதி இண்டா கைதுசெய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்