புத்ராஜெயா: கர்ப்பிணிக் காதலியைக் கத்தியால் குத்தி, பின்னர் அவரது உடலுக்குத் தீயிட்ட 23 வயது முன்னாள் கல்லூரி மாணவருக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
ஃபக்ருல் ஐமான் சஜாலி என்ற அவர், முன்னதாக விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார்.
நீதிபதி அஸ்மான் அப்துல்லா வழிநடத்திய மூன்று உறுப்பினர்கள் அடங்கிய நீதிபதிகள் குழு அந்த மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு மரண தண்டனைக்குப் பதிலாக அவருக்குச் சிறைத்தண்டனையை விதித்தது.
“குற்றம் புரிந்த நேரத்தில் குற்றவாளியின் வயதையும் மரண தண்டனை அல்லது சிறைத் தண்டனை ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து விதிப்பதற்கு நீதிமன்றத்திற்குச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தையும் நாங்கள் கருத்தில் கொண்டோம்,” என்றார் நீதிபதி அஸ்மான்.
நீதிபதிகள் அகமது கமால் ஷாஹித், ராட்ஸி ஹரூன் ஆகியோரும் நீதிபதிக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
முன்னதாக, கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதத்தில் நூர் அனிசா அப்துல் வஹாப் என்ற பெண்ணைக் கொலைசெய்த குற்றத்தை ஃபக்ருல் ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, சென்ற ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி, கிள்ளானில் உள்ள உயர் நீதிமன்றம் ஃபக்ருலுக்கு மரண தண்டனையை விதித்தது. நீதிபதி நோர்லிஸா ஒத்மான் அந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தார்.
குற்றம் நடந்த நேரத்தில் ஃபக்ருலுக்கு வயது 20.
குற்றவாளி இரு உயிர்களைப் பறித்ததாக அவர் சொன்னார். ஒன்று, காதலி. மற்றொன்று, பிறக்காத 18 வாரக் குழந்தை.
தொடர்புடைய செய்திகள்
ஃபக்ருல், காதலியின் தலையில் தாக்கி, அவரை ஒரு வடிகாலுக்கு இழுத்துச் சென்று, கத்தியால் அவரது வயிற்றில் குத்திக் கொன்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், அந்தப் பெண்ணின் உடல் முழுவதும் பரவலான தீக்காயங்கள் இருந்ததை சுங்கை புலோ மருத்துவமனையின் தடயவியல் துறை வெளியிட்ட உடற்கூராய்வுப் பரிசோதனை உறுதிப்படுத்தியது.

