பாங்கி: டிக்டாக்கில் மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தரை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டதை ஒப்புக்கொண்டதை அடுத்து, ஆடவர் ஒருவருக்கு மூன்று மாதச் சிறைத்தண்டனையும் 5,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டன.
42 வயது முகம்மது ஹஃபீஸ் ஹரோன் செவ்வாய்க்கிழமை (மே 5) முதல் தனது தண்டனையைத் தொடங்க வேண்டும் என்றும் அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஃபிர்தௌஸ் முகம்மது ஈசா உத்தரவிட்டார்.
2025 செப்டம்பர் 11ஆம் தேதி காலை 7.30 மணியளவில் தனது டிக்டாக் கணக்கு மூலம் மற்றவர்களைப் புண்படுத்தும் நோக்கத்துடன், மிகவும் அவதூறான ஒரு கருத்தை வேண்டுமென்றே முகம்மது ஹஃபீஸ் பரப்பினார் என்று குற்றம் சாட்டப்பட்டது.
தனக்காக வாதாட வழக்கறிஞர் எவரையும் நியமிக்காத ஹஃபீஸ், தான் பல சிறு வேலைகளைச் செய்து வருவதாகவும் தன் வருமானத்தை நம்பியே தன் குடும்பம் நம்பியிருப்பதாகவும் தனக்குக் குறைந்த தண்டனை வழங்குமாறும் மன்றாடினார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில், மலேசிய மாமன்னர் மற்றும் மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிரான தேச துரோக மற்றும் அவதூறான கருத்துகளைக் கொண்ட டிக்டாக் காணொளி ஒன்று தொடர்பில், புக்கிட் அமான் ரகசிய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் எம். குமார் தெரிவித்திருந்தார்.
அவர்மீது போதைப்பொருள் புழக்கம், மற்ற மூன்று குற்றவியல் வழக்குகள் உள்ளிட்ட முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

