அனாக் கிரக்கடாவ் எரிமலைக் குமுறலால் ஜகார்த்தா விமான நிலையம் மூடல், எஸ்ஐஏ சேவைகள் பாதிப்பு

அனாக் கிரக்கடாவ் எரிமலைக் குமுறலால் ஜகார்த்தா விமான நிலையம் மூடல், எஸ்ஐஏ சேவைகள் பாதிப்பு

2 mins read
62e09842-88c3-4de3-9d38-eec1eab1eae9
அனாக் கிரக்கடாவ் எரிமலை வெள்ளிக்கிழமையிலிருந்து சீறிக் கொண்டிருக்கிறது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அனாக் கிரக்கடாவ் எரிமலை வெடித்து வானத்தை நிரப்பும் அளவுக்கு சாம்பலை வெளியேற்றி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகர்னோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையம் ஞாயிற்றுக் கிழமை (செப்டம்பர் 6) தற்காலிகமாக மூடப்பட்டது.

காலை 9.30 மணியிலருந்து வரை சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதாக ஜகார்த்தாவின் முக்கிய விமான நிலையம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது.

முன்னதாக காலை 5.30 மணி வரை அறிவிக்கப்பட்டிருந்த இந்தத் தற்காலிகத் தடை நீட்டிக்கப்பட்டதால் பல அனைத்துலக விமானங்கள் உட்பட 33 விமானங்கள் பாதிக்கப்பட்டதாக இந்தோனீசியப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட விமான நிறுவனங்களில் சிங்கப்பூர் ஏர்லைன்சும் ஒன்று.

அந்நிறுவனம் சனிக்கிழமையன்று ஜகார்த்தாவிற்குச் செல்லும், அங்கிருந்து புறப்படும் இரண்டு விமானங்களை ரத்து செய்தது.

சனிக்கிழமை இரவு புறப்பட வேண்டிய ஜகார்த்தாவுக்கான மூன்றாவது எஸ்ஐஏ விமானம் ஞாயிறு பிற்பகலுக்கு மாற்றப்பட்டது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமை காலை ஜகார்த்தாவிலிருந்து சிங்கப்பூர் புறப்பட வேண்டிய மற்றொரு விமானம் பிற்பகல் 3.50 மணி வரை ஒத்தி போடப்பட்டது.

“சூழ்நிலை தொடர்ந்து மாறிவருவதால் சிங்கப்பூர், இந்தோனீசியாவிற்கு இடையிலான பிற எஸ்ஐஏ விமானங்களும் பாதிக்கப்படலாம்,” என்று அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணிகள் தங்களது விமானங்கள் குறித்த அண்மைக்கால தகவல்களைப் பெற எஸ்ஐஏவின் அண்மைய விமானங்களின் நிலவரத்தைச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அனாக் கிரக்கடாவ் எரிமலை வெள்ளிக்கிழமை பிற்பகுதியிலிருந்து வெடித்து வருவதாகவும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் விமான நிலையத்தில் எரிமலை சாம்பல் கண்டறியப்பட்டதாகவும் அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த எரிமலை வெடிப்பால் உடனடியாக சுனாமி அபாயம் எதுவும் இல்லை என்று இந்தோனீசியப் பேரிடர் தணிப்பு அமைப்பு சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்