ஜகார்த்தா: ஜகார்த்தா நிர்வாகம் செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ஆசியான் மாநாட்டை முன்னிட்டு மாணவர்கள் வீட்டிலிருந்தே படிப்பதற்கும், நகர ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்குமான கொள்கைகளை நடைமுறைப்படுத்தவிருக்கிறது.
அண்மை மாதங்களில் அந்நகரைப் பாதித்துள்ள கடுமையான காற்றுத் தூய்மைக்கேட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த மே மாதத்திலிருந்து உலக அளவில் ஆக மோசமான காற்றுத் தூய்மைக்கேடு நிலவும் நகரங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ளது, ஜகார்த்தா.
சுவிஸ் காற்றுத் தரத் தொழில்நுட்ப நிறுவனமான ‘ஐகியூஏர்’ அந்தப் புள்ளி விவரங்களை வெளியிட்டது.
நீண்டகாலமாக நிலவும் வறண்ட பருவநிலை காரணமாகக் காற்றுத் தூய்மைக்கேடு மோசமடைந்து வருவதாக அதிகாரிகள் குறைகூறுகின்றனர்.
இந்நிலையில், ஜகார்த்தா இந்த வாரத்திலிருந்து அக்டோபர் 21ஆம் தேதிவரை அதன் ஊழியர்களில் 50 விழுக்காட்டினருக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கையை நடைமுறைப்படுத்த தொடங்கும் என்று தொடர்பு, தகவல், புள்ளிவிவர அமைப்பின் தலைவர் கூறினார்.
பொதுமக்களுக்கு நேரடிச் சேவை வழங்காத ஊழியர்களுக்கு மட்டுமே அந்த ஏற்பாடு பொருந்தும் என்றார் அவர்.