கோத்தா பாரு: ஜாலான் மஸ்ஜித் இந்தியாவை பாதுகாப்பற்றது என்றோ பேரிடர் பகுதி என்றோ அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று காவல்துறை தலைமை அதிகாரி டான் ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்து உள்ளார்.
எந்தவொரு பகுதியையும் பாதுகாப்பற்றது என்று அறிவிக்க, தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சிறப்பு அனுமதியை காவல்துறை பெற வேண்டும் என்று அவர் விளக்கினார்.
ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்தியாவைச் சேர்ந்த விஜயலட்சுமி என்னும் 48 வயதுப் பெண் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஆழ்குழிக்குள் விழுந்த சம்பவம் பேரிடராக வகைப்படுத்தப்படவில்லை என்றார் அவர்.
“அது ஒரு பேரிடர் சம்பவமாக இல்லாவிட்டாலும் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, கோலாலம்பூர் நகர மன்றம், குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் தங்களது கடமைகளை இடைவிடாது செய்து வருகின்றனர்,” என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, குழிக்குள் விழுந்த பெண்ணைத் தேடும் பணி வியாழக்கிழமையும் தொடர்ந்தது.
அது குறித்து திரு ரஸாருதீனிடம் செய்தியாளர்கள் வினவினர்.
அதற்குப் பதிலளித்த அவர், “ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் சம்பவம் நிகழ்ந்த பகுதியை இருமுறை சென்று பார்த்தேன். மாயமான பெண் கண்டுபிடிக்கப்படும் வரை தேடுதல் பணி தொடரும்,” என்றார்.
மேலும், ஜாலான் ராஜா லாவுட் வரையிலான ஜாலான் மஸ்ஜித் இந்தியாவின் வழித்தடம் தேடுதல் பணிக்காக மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், சம்பவம் நிகழ்ந்த இடத்தின் அருகில் உள்ள கடைகளை மூடுமாறு அதிகாரிகள் உத்தரவிடவில்லை என்றார் அவர்.
கொண்டாட்டங்கள் ரத்து
இந்நிலையில், கோலாலம்பூர் நகர மன்றம் ஆகஸ்ட் 31 சுதந்திரத் தினத்தையொட்டி அதற்கு முன்தினம் ஏற்பாடு செய்திருந்த கொண்டாட்டங்களை, ஜாலான் மஸ்ஜித் இந்தியா சம்பவத்துக்கு மதிப்பளித்து ரத்து செய்துவிட்டது.
அந்தக் கொண்டாட்டங்களை, சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து பலநூறு மீட்டர் தூரத்தில் உள்ள மெர்டேக்கா சதுக்கத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது.
உதவ முன்வந்த மந்திரவாதி
இதற்கிடையே, எட்டு மீட்டர் ஆழ்குழிக்குள் விழுந்த விஜயலட்சுமியைக் கண்டுபிடித்துத் தர மந்திரவாதி ஒருவர் முன்வந்து உள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தைக் கண்டுபிடிக்க தேங்காய்களையும் மூங்கில்களையும் பயன்படுத்தி உதவ முடியும் என்று சொன்னபோது இப்ராகிம் மாட் ஜின் என்னும் அந்த மந்திரவாதி பிரபலமானார்.
புகைமூட்டப் பிரச்சினையை நாட்டிலிருந்து ஒழிப்பதற்கும் வினோதமான யோசனையைத் தெரிவித்து வியப்பை ஏற்படுத்தியவர் அவர்.
பெண்ணைக் கண்டுபிடிக்கும் பணி தொடரும் நிலையில் அதற்கு உதவத் தயார் என்று அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், சம்பவம் நிகழ்ந்த குழி அருகே மந்திரவாதி செல்ல அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.