தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜாலான் மஸ்ஜித் இந்தியா மீண்டும் திறப்பு

2 mins read
கடந்த ஆகஸ்ட் மாதம் புதைகுழியில் பெண் விழுந்ததை அடுத்து மூடப்பட்டிருந்தது
9c050019-6f23-4f6b-93bc-352e4befdc42
2024 டிசம்பர் 3ஆம் தேதி ஜாலான் மஸ்ஜித் இந்தியா மீண்டும் திறக்கப்பட்ட பிறகு கோலாலம்பூர் மேயர் மைமுனா முகமது ஷெரீப் (ஊதா நிற உடை) அதிகாரிகளுடன் அங்கு நடந்து சென்றார். - படம்: தி ஸ்டார்

கோலாலம்பூர்: சாலையில் திடீரெனத் தோன்றிய புதைகுழியில் இந்திய மாது ஒருவர் விழுந்து மாயமான சம்பவம் நிகழ்ந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்ள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதி மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2025 எனத் திட்டமிடப்பட்ட இலக்கைவிட இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே அந்தச் சாலையின் பாதுகாப்பு, பழுதுபார்க்கும் பணிகள் நிறைவடைந்தன என்று கோலாலம்பூர் நகர மேயர் மைமுனா முகம்மது ஷரிஃப் தெரிவித்தார்.

“எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் பொருள் வாங்குவதற்கும் அவர்களின் வணிகத் தேவைகளுக்கும் இடமளிக்கும் வகையில் முன்கூட்டியே பணிகள் நிறைவடைந்துள்ளன,” என்று அவர் கூறினார்.

டிசம்பர் 31ஆம் தேதி ஜாலான் மஸ்ஜித் இந்தியாவைச் சுற்றிப் பார்த்த பிறகு திருவாட்டி மைமுனா, செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.

புதைகுழி சம்பவத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட சிறப்புப் பணிக்குழு தாக்கல் செய்துள்ள ‘புதைகுழி சம்பவம் பற்றிய இறுதி அறிக்கை’யை கோலாலம்பூர் நகர மண்டபம் (டிபிகேஎல்) ஆராய்ந்து வருகிறது என்றும் மேயர் மைமுனா கூறினார்.

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவின் சுற்றுப்புறத்தில் கோலாலம்பூர் நகர மண்டபம், நான்கு ஆழ்துளைச் சோதனைகளையும் மண் தரச் சோதனையையும் நடத்தியது என்றும் மேயர் விவரித்தார்.

2024 ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் திடீரென உருவான புதைகுழியில் 48 வயதான விஜயலட்சுமி என்ற பெண்மணி விழுந்து காணாமல் போனார். இந்தச் சம்பவம் அனைவரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஒன்பது நாள் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

குறிப்புச் சொற்கள்