தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செயற்கை நுண்ணறிவு, நுண்சில்லுகளில் ஜப்பான் S$86.1 பில்லியன் முதலீடு

2 mins read
fba2e556-5c34-4587-b9cc-9de073e30d21
ஜப்பானில் செயற்கை நுண்ணறிவு குறித்த முயற்சிகள் சூடுபிடித்துவருகின்றன. - படம்: ஏஎஃப்பி

உலகளாவிய தொழில்நுட்பத் தலைவராக அதன் நிலையை மீட்டெடுக்கவும், அதன் மூப்படையும், சுருங்கிவரும் மக்கள்தொகையின் அவசர சவால்களை எதிர்கொள்ளவும் ஜப்பான் தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது.

அவ்வகையில், நுண்சில்லுகள் (microchips), செயற்கை நுண்ணறிவில் 10 டிரில்லியன் யென் (86.1 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) முதலீட்டை ஜப்பான் தயாரித்துவருகிறது.

உலகின் பெரும்பாலான நுண்சில்லுகள் தைவானில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் தைவானுக்கு உரிமைக் கொண்டாடும் பெய்ஜிங் தைவானைத் தாக்கினால், அங்கிருந்துவரும் நுண்சில்லு இறக்குமதி தடைப்படும் என்ற பயம் உலக நாடுகளை உலுக்கிவருகிறது. இதனாலேயே ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் தம் நுண்சில்லு உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்திவருகின்றன.

ஜப்பானின் இந்த முதலீட்டுக்கான தொகுப்புத்திட்டத்திற்கு (package) நாடாளுமன்றத்தில் இவ்வாரத்திற்குள் ஒப்புதல் அளிக்கப்படக்கூடும்.

ஆனால், செயற்கை நுண்ணறிவு தரவு நிலையங்களுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை ஜப்பானால் போதிய அளவில் உருவாக்கமுடியுமா என்றும், ஊழியர்ப் பற்றாக்குறைக் குறித்தும் ஆய்வாளர்களிடத்தில் கேள்விகள் நிலவுகின்றன.

1980களில் தொழில்நுட்ப வன்பொருளில் (tech hardware) முன்னிலை வகித்த ஜப்பான், “செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரையில் நெடுங்காலம் வெறும் பார்வையாளராக இருந்தது,” என்றார் ‘ஏஐ ஆசிய பசிபிக்’ கழகத் தலைவர் கெல்லி ஃபார்ப்ஸ்.

“கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் ஜப்பான் இந்த வளர்ச்சிகளில் பொதிந்துள்ள வாய்ப்புகளை உணர்ந்து விழித்துள்ளது,” என அவர் ‘ஏஎஃப்பி’யிடம் கூறினார்.

சென்ற வாரம்தான் ஜப்பானிய தொழில்நுட்ப முதலீட்டாளர் சாஃப்ட்பேங்க், அமெரிக்க கணினியியல் பெருநிறுவனம் என்விடியா இணைந்து, உலகின் முதல் ‘ஏஐ’ கட்டமைப்பை (AI Grid) ஜப்பானில் கட்ட திட்டங்களை அறிவித்தன.

குறிப்புச் சொற்கள்