தோக்கியோ: ஜப்பானும் அமெரிக்காவும் சீனா தொடர்பான பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் தொலைபேசியில் உரையாடியபோது பொருளியல் பாதுகாப்பு உள்ளிட்ட பல விவகாரங்களில் ஒத்துழைப்பதற்கான இணக்கம் எட்டப்பட்டதாக ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி சனிக்கிழமை (செப்டம்பர் 26) தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் கடந்த வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்றுப் பல்வேறு அம்சங்கள் குறித்துப் பேசியிருந்தார். அதுபற்றித் திரு டிரம்ப் தம்மிடம் விரிவாய் எடுத்துச்சொன்னதாகத் திருவாட்டி தக்காய்ச்சி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் நியூயார்க்கில் நேரில் சந்தித்தது உட்பட ஒரே வாரத்தில் ஜப்பான்-அமெரிக்கத் தலைவர்கள் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வலுவான கூட்டணியை இது வெளிப்படுத்துவதாக ஜப்பானியப் பிரதமர் கூறினார்.
ஐக்கிய நாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்திற்கு இடையே சென்ற செவ்வாய்க்கிழமை திரு டிரம்பைச் சந்தித்து அவர் பேசினார். அமெரிக்க-சீன உச்சநிலை மாநாட்டிற்கு முன்னர் வாஷிங்டனோடு ஜப்பானியத் தரப்பின் கருத்துகளை ஒருங்கிணைக்கும் வெளிப்படையான முயற்சியாக அது பார்க்கப்பட்டது.
அமெரிக்க-சீன அதிபர்களின் உச்சநிலை மாநாட்டில் இரண்டாம் உலகப் போர் பற்றிய பேச்சும் இடம்பெற்றது. ஜப்பானின் தோல்வியுடன் முடிந்த அதில் இரு நாடுகளும் கூட்டாளிகளாக இருந்ததைத் திரு டிரம்ப் சுட்டினார். ஜப்பானிய ராணுவ ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான போரில் இரு தரப்பும் தோளோடு தோள் நின்று போராடியதைத் திரு ஸி நினைவுகூர்ந்தார்.
ஜப்பானும் அமெரிக்காவும் இப்போது அதிக நம்பிக்கை கொண்ட கூட்டாளிகளாக இருப்பதைத் திருவாட்டி தக்காய்ச்சி வலியுறுத்தினார். அமெரிக்க அதிபருடன் 20 நிமிடங்கள் தொலைபேசியில் அவர் உரையாடினார். அப்போது வட்டார, உலக அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பைத் தாமும் திரு டிரம்ப்பும் உறுதிப்படுத்தியதாக ஜப்பானியப் பிரதமர் கூறினார்.
பாதுகாப்பு விவகாரங்களில் தீவிரமான போக்கைக் கொண்டவராக அறியப்படுகிறார் திருவாட்டி தக்காய்ச்சி. சீனா உரிமை கோரும் தன்னாட்சித் தீவான தைவான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு ஜப்பானிய தற்காப்புப் படைகள் பதிலடி கொடுக்கக்கூடும் என்று கடந்த நவம்பரில் அவர் கூறியிருந்தார்.
இது சீனாவைக் கடுஞ்சினத்திற்கு உள்ளாக்கியது. அதிலிருந்து சீனா-ஜப்பான் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
