தோக்கியோ: சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையைக் கிட்டத்தட்ட 100 வட்டாரங்களில் கட்டுப்படுத்துவதற்கான திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் அந்தத் திட்டம் தேர்வுசெய்யப்பட்ட 100 வட்டாரங்களில் அமல்படுத்தப்படும்.
ஜப்பானில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களுக்கு அளவுக்கு அதிகமான சுற்றுப்பயணிகள் செல்வதால் அங்குள்ள குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படுவதாக ஜப்பானிய அமைச்சரவை தெரிவித்தது.
இதுவரை கியோட்டோ உள்ளிட்ட 47 மேற்கு ஜப்பான் வட்டாரங்களில் குடியிருப்பாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப சுற்றுப்பயணிகள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அடுத்த அடிப்படை சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் 2026ஆம் ஆண்டு தொடங்கி 2030ஆம் ஆண்டு வரை நீடிக்கும்.
வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கையை 2030ஆம் ஆண்டுக்குள் 60 மில்லியனுக்கு அதிகரிக்கும் அரசாங்கத்தின் இலக்கை கட்டிக்காக்கத் திட்டம் உதவும்.
அத்துடன், சுற்றுப்பயணிகள் மூலம் வரும் வருவாயை 15 டிரில்லியன் யென்னுக்கு அதிகரிக்கவும் திட்டம் கைகொடுக்கும்.
சுற்றுப்பயணிகள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி உள்ளூர்ச் சாலைகளில் நெரிசலைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவிருக்கிறது.
வட்டார இடங்களுக்கு மக்களைக் கவரும் போக்குவரத்து வசதிகளையும் ஜப்பானிய அரசாங்கம் மேம்படுத்தவுள்ளது.
உள்ளூர்ச் சுற்றுலாத் தலங்களில் குடியிருப்பாளர்களுக்கும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கும் தனித்தனி கட்டணங்கள் வசூலிப்பது குறித்தும் அரசாங்கம் ஆலோசிக்கும்.


