ஈரானின் அணுசக்தி திட்டத்துக்கு ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி கண்டனம் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை தோக்கியோ ஆதரிக்கிறதா என்பது குறித்து கருத்து தெரிவிக்காமல் கவனமாகப் பதிலளித்துள்ளார்.
திங்கட்கிழமையன்று (மார்ச் 2) பேசிய திருமதி தக்காய்ச்சி, “நாங்கள் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். நிலைமை குறித்த தகவல்களைச் சேகரிப்பது உட்பட தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்,” என்றார்.
“ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை அனுமதிக்கக்கூடாது என்பதே எங்களது உறுதியான நிலைப்பாடு,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அணுசக்தி விவகாரத்தில் அமெரிக்கா-ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு ஜப்பான் ஆதரவாக இருந்து வருவதை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், மத்திய கிழக்கில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஈரான் நிறுத்த வேண்டும் என்றும் கூறினார்.
ஒரு நாட்டின் தலைமைத்துவத்தை அகற்றி அதன் இறையாண்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நேரடியாக ஆதரிக்காமல், தமது முக்கிய பாதுகாப்பு நட்பு நாடான அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவிப்பதில் உள்ள சிரமத்தைப் பிரதமர் தக்காய்ச்சியின் உரையில் இடம்பெற்ற கருத்துகள் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜப்பான் தமது எரிசக்தி தேவைக்காக மத்தியக் கிழக்கு நாடுகளின் எண்ணெயைப் பெரிதும் நம்பியிருக்கிறது. இது அந்நாட்டு அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

