தோக்கியோ: ஜப்பானில் உள்ள பழைய அணுவாலைகளின் செயல்பாடு நிறுத்தப்படுவதை அடுத்து, அணுவாலை விரிவாக்கத் திட்டத்தை அந்நாட்டுப் பொருளியல் அமைச்சு பரிசீலிக்கவிருப்பதாக அசாஹி நாளிதழ் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் தேசிய எரிசக்தி உத்தியில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களின் ஒரு பகுதியாக இவ்வாறு அனுமதி வழங்கப்படக்கூடும்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜப்பானிய அரசாங்கம் இந்த உத்தியை மறுஆய்வு செய்வது வழக்கம் என்று அசாஹி குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும் இந்தத் தகவல் எங்கிருந்து பெறப்பட்டது என்பதை அந்நாளிதழ் வெளியிடவில்லை.
அணுவாலைகளின் செயல்பாட்டை நிறுத்தும் மின்னுற்பத்தி நிறுவனங்கள் ஏற்கெனவே உள்ள அணுமின் நிலையங்களில் புதிய அணுவாலைகளைக் கட்ட அனுமதி வழங்கப்படக்கூடும் என்று அது கூறுகிறது.
இருப்பினும் பழைய அணுவாலைகளுக்குப் பதிலாக மட்டுமே புதிய அணுவாலைகள் கட்டப்பட அனுமதி வழங்கப்படும் என்றும் அணுவாலைகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட மாட்டாது என்றும் அசாஹி தெரிவித்துள்ளது.
2011ஆம் ஆண்டு ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்தில் நடந்த பேரிடருக்குப்பின் ஜப்பானில் அணுமின் நிலையங்கள் தொடர்பான விவகாரம் சர்ச்சைக்குரிய அரசியல் விவகாரமாகவே தொடர்கிறது.
தொடர்புடைய செய்திகள்
தற்போதைய தேசிய எரிசக்தி உத்தியின்கீழ் ஜப்பான் அதன் அணுசக்திச் சார்பைக் குறைத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
2030க்குள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்களின் வெளியேற்றத்தை 46 விழுக்காடு குறைக்கவும் இந்த நூற்றாண்டின் மத்திக்குள் கரிமச் சமநிலையை எட்டவும் ஜப்பான் உறுதியளித்துள்ளது.

