தோக்கியோ: ஜப்பானின் மலைப்பாங்கான வடபகுதியில் கரடித் தொல்லை சமாளிக்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, உள்ளூர் அதிகாரிகள் உதவி கோரியதை அடுத்து கரடிகளைப் பிடிக்க ஜப்பானிய ராணுவம் புதன்கிழமை (நவம்பர் 5) தனது படையினரை அனுப்பி வைத்துள்ளது.
கசுனோ நகரில் அந்நடவடிக்கை தொடங்கியுள்ளது. சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி கடந்த பல வாரங்களாக அப்பகுதிவாசிகள் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்.
இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட கரடித் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன என்றும் அதனால் 12 பேர் இறந்துவிட்டனர் என்றும் ஜப்பானிய சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
கசுனோ அமைந்துள்ள அகித்தா மாநிலத்திலும் அருகிலுள்ள இவாத்தே மாநிலத்திலும்தான் மூன்றில் இரு தாக்குதல்கள் இடம்பெற்றன.
“மக்கள் அதிகம் வசிக்கும் பல இடங்களில் கரடிகள் புகுவதும் அவற்றின் தாக்குதலால் பலர் காயமடைவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால், கரடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை தள்ளிப்போட முடியாது,” என்று துணைத் தலைமை அமைச்சரவைச் செயலாளர் கெய் சாத்தோ செய்தியாளர்களிடம் கூறினார்.
அகித்தா மாநிலத்தில் இவ்வாண்டு கரடிகள் தென்பட்டது ஆறு மடங்கு அதிகரித்து, 8,000க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இதனையடுத்து, அம்மாநில ஆளுநர் ஜப்பானின் தற்காப்புப் படையிடம் சென்ற வாரம் உதவிகோரினார்.
வெப்ப நீருற்றுகள், இயற்கை அழகு, பலவகை இனிப்பு ஆப்பிள்கள் ஆகியவற்றுக்குப் பெயர்பெற்ற கசுனோ நகரில் ஏறக்குறைய 30,000 பேர் வசிக்கின்றனர்.
இந்நிலையில், ராணுவ வாகனத்திலும் ஜீப்களிலும் கவச உடையுடன் கூடிய பத்துக்கும் மேற்பட்ட படைவீரர்கள் புதன்கிழமை காலை கசுனோ நகருக்கு வந்தனர்.
அவர்கள் கரடிகளைப் பொறிவைத்துப் பிடிக்கும் பெட்டிகளை எடுத்துச் செல்லவும், உரிய இடங்களில் வைக்கவும், ஆய்வுசெய்யவும் உதவுவர். ஆயினும், பிடிபட்ட கரடிகளைக் கொல்லும் பணி உரிய ஆயுதப் பயிற்சி பெற்றவர்களிடம் விடப்படும் எனச் சொல்லப்படுகிறது.

