தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பான் நிலநடுக்கம்: மாண்டோர் எண்ணிக்கை 110ஆக அதிகரிப்பு

2 mins read
251252ba-3425-4062-a793-b9bc81afac75
ஜப்பானின் மேற்கு கடலோரப் பகுதியில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டடங்களுக்கு அடியில் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணி தொடர்ந்து ஆறாவது நாளாக நடந்து வருகிறது. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானில் புத்தாண்டு நாளன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை சனிக்கிழமை 110ஆக அதிகரித்தது.

இன்னும் 200க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி அதிதீவிரமாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட கடந்த எட்டு ஆண்டுகளில் ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கங்களில் மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும்.

ஜப்பானின் மேற்குக் கடலோரத்தில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் அப்பகுதியின் உள்கட்டமைப்புப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹொக்குரிகு பகுதியில் இருக்கும் 23,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இடிபாடுகளில் சிக்கியிருப்போர்களை மீட்கும் பணி தொடர்ந்து ஆறாவது நாளாக நடந்து வருகிறது. மேலும், வீடுகளைவிட்டு வெளியேறிய 30,000க்கும் மேற்பட்டோர் நிவாரண உதவிக்காக காத்திருக்கின்றனர்.

2016ஆம் ஆண்டு ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குமாமோட்டோவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 276 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பிறகு அந்நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கங்களில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதிவான நிலநடுக்கம் இதுதான்.

சாலைகள் பிளவுபட்டிருப்பதாலும் பிற பிரச்சினைகளாலும் நிவாரணப் பொருள்கள் மக்களிடம் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இஷிகாவா வட்டாரத்தில் உள்ள வாஜிமா பகுதி குடியிருப்பாளரான 73 வயது மசாவோ மொச்சிசுகி, வியாழக்கிழமையன்று மீண்டும் திறக்கப்பட்ட பல்பொருள் அங்காடி ஒன்றின் முன்பு, நீண்ட வரிசையில் நின்று தனக்குத் தேவையான பொருள்களை வாங்கினார்.

“இந்தப் பல்பொருள் அங்காடியை அவர்கள் திறந்தது மிகவும் உதவியாகவுள்ளது,” என அவர் ராய்ட்டர்சிடம் தெரிவித்தார்.

“ஆனால், சாலைகளைச் சரிசெய்யும் பணி இன்னும் நடக்கவில்லை. அதை எப்போது தொடங்குவார்கள் எனத் தெரியவில்லை,” என அவர் தழுதழுத்த குரலில் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்