தோக்கியோ: தாதிமைத் துறையில் நிலவும் கடுமையான ஊழியர் பற்றாக்குறையைச் சமாளிக்க ஜப்பானின் சுகாதார, தொழிலாளர், நல்வாழ்வுத் துறை அமைச்சு, 2025 நிதியாண்டு முதல் தென்கிழக்காசியாவில் இருந்து தாதிமைப் பராமரிப்பு ஊழியர்களின் ஆட்சேர்ப்பை மும்முரமாக ஊக்குவிக்கவுள்ளது.
இந்த வட்டாரத்திலிருந்து ஆளெடுப்பதில் தாதிமைப் பராமரிப்புச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவுகளில் ஒரு பகுதியை அமைச்சு ஏற்கும். அதோடு, இந்தோனீசியாவில் தாதிமைப் பராமரிப்புக் கல்வித் திட்டம் ஒன்றை அமைச்சு ஏற்படுத்தும்.
ஜப்பானின் மக்கள்தொகை மூப்படைந்துவரும் வேளையில் கூடுதலான முதியோருக்குப் பராமரிப்பு தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், மற்ற நாடுகளிலிருந்து ஊழியர்களைக் கொண்டு வருவதில் உத்திபூர்வ முயற்சிகளை எடுக்க வேண்டியிருப்பதாக அமைச்சு கருதுகிறது.
2025ல், ஜப்பானில் ஐந்தில் ஒருவர் 75 வயது அல்லது அதற்கு அதிக வயதுடையவராக இருப்பார். தற்போது ஏறத்தாழ 2.15 மில்லியன் தாதிமைப் பராமரிப்பு ஊழியர்கள் உள்ளனர். ஆனால், 2026 நிதியாண்டில் ஊழியர் பற்றாக்குறை 250,000ஆகவும் 2040 நிதியாண்டில் அது 570,000ஆகவும் இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
குடிநுழைவுச் சேவை முகவையைப் பொறுத்தமட்டில், தாதிமைப் பராமரிப்புத் துறையில் வேலை செய்ய 2023 இறுதி நிலவரப்படி, திறன்மிக்க ஊழியர் விசாவுடன் 28,400 வெளிநாட்டவர்கள் ஜப்பானுக்குச் சென்றனர். அந்த எண்ணிக்கை, அரசாங்கத்தின் இலக்கில் 50 விழுக்காட்டுக்கும் சற்று அதிகம்.
முதியவர்களுக்கான சிறப்புத் தாதிமை இல்லங்களையும் பராமரிப்பு ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கும் பள்ளிகளையும் இயக்க நிறுவனங்களுக்கு ஏற்படும் பயணச் செலவுகளைச் சமாளிக்க அமைச்சு மானியங்களை வழங்கும்.
பராமரிப்பாளர்களாக பயிற்சிபெறும் உள்ளூர் இளையர்களுக்கு, ஜப்பானில் பணிபுரிவதால் வழங்கப்படும் அனுகூலங்கள் குறித்து விளக்கப்படும். நேர்முகத் தேர்வுகளுக்கும் இதர ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்கும் நிதியாதரவு வழங்கப்படும்.
மத்திய, மாநில அரசாங்கங்களிடமிருந்து ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மொத்தம் 1 மில்லியன் யென் (S$8,800) வழங்கப்படும். 2025 நிதியாண்டில் 100 தொழில் நிறுவனங்கள் வரை இத்திட்டத்தில் பங்குபெறும் என்பதை அமைச்சு எதிர்பார்க்கிறது.

