தோக்கியோ: இணையத்தில் பலர் கேலிசெய்ததை அடுத்து, அமைச்சரவை உறுப்பினர்களின் தோற்றத்தை மேம்படுத்தும் நோக்கில், புதிய அமைச்சரவையின் அதிகாரபூர்வ புகைப்படத்தில் மாற்றங்கள் செய்ததை ஜப்பானிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
ஊடகங்கள் எடுத்த புகைப்படங்களில், பிரதமர் ஷிகெரு இஷிபா, தற்காப்பு அமைச்சர் கென் நாக்காட்டானி ஆகியோரின் ஆடைகள் கலைந்திருந்ததைக் காணமுடிந்தது.
இருப்பினும், திரு இஷிபாவின் அலுவலகம் வெளியிட்ட அதிகாரபூர்வ படத்தில் அவை மாயமாக மறைந்துவிட்டன.
‘சிறிய அளவில் திருத்தங்கள் செய்யப்பட்டன,” என்று அரசாங்கத்தின் மூத்த பேச்சாளர் யோஷிமாசா ஹயாஷி செய்தியாளர்களிடம் கூறினார்.
“பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ நிகழ்வுகளில் எடுக்கப்படும் புகைப்படங்கள் இறுதிவரை பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும். அதனால் அந்தப் படங்களில் சிறிய அளவில் திருத்தங்கள் செய்வது வழக்கம்,” என்றார் அவர்.
முன்னதாக பிரிட்டனின் வேல்ஸ் இளவரசி கேத்தரின் கடந்த மார்ச் மாதத்தில், மாளிகை வெளியிட்ட தமது மகள்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மாற்றங்கள் செய்திருந்ததாகக் கூறி மன்னிப்புக் கோரியிருந்தார்.