சீனா மிரட்டலைச் சமாளிக்க தற்காப்புக்கு அதிக நிதியை ஒதுக்குகிறது ஜப்பான்

2 mins read
f94c94c0-c2ef-4f90-87bf-ba0d4492944f
இதுவரை இல்லாத அளவு 8.7 டிரில்லியன் யென் தொகையை தற்காப்புக்கு ஒதுக்க ஜப்பானிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. - கோப்புப் படம்: இபிஏ

தோக்கியோ: மூப்படையும் சமூகத்துக்கும் தற்காப்புக்கும் அடுத்த நிதி ஆண்டில் அதிக செலவுகளை அனுமதிக்கும் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஜப்பானிய அரசாங்கம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) ஒப்புதல் அளித்து உள்ளது.

சாதனை அளவாக 115.5 டிரில்லியன் யென் (S$996 பில்லியன்) மதிப்புள்ள அந்த வரவுசெலவுத் திட்டம் சமூக நலனில் அதிக அக்கறை செலுத்துகிறது.

மேலும், வட்டார அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் விதமாக தற்காப்புக்கும் ஜப்பானிய அரசாங்கம் அதிக செலவிடத் திட்டமிட்டு உள்ளது. இதுவரை இல்லாத அளவு 8.7 டிரில்லியன் யென் தொகையை தற்காப்புக்கு ஒதுக்க ஏற்கெனவே அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, 2025 ஏப்ரலில் தொடங்கும் நிதி ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அந்தத் தொகை சேர்க்கப்பட உள்ளது.

அதேபோல, சமூகப் பாதுகாப்புச் செலவினங்களுக்கு 38.3 டிரில்லியன் யென் செலவிடத் திட்டமிடப்பட்டு உள்ளது. கடந்த நிதி ஆண்டில் அந்தத் தொகை 37.7 டிரில்லியன் யென்னாக இருந்தது.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் இருந்து ஜப்பான் மிகவும் கடுமையான, சிக்கலான பாதுகாப்புச் சூழலை எதிர்கொண்டு வருவதாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு வெளியிட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அது தொடர்பாக பிரதமர் ஷிகெரு இஷிபா மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

போருக்குப் பிந்திய ஜப்பானின் அரசியலமைப்பு அமைதியின் அடிப்படையிலானது. அதனால், வெளிப்படையான தற்காப்பு நடவடிக்கைகளுக்குரிய ராணுவப் படையினரின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது.

இருப்பினும், 2022ஆம் ஆண்டு ஜப்பான் தனது முக்கிய பாதுகாப்பு மற்றும் தற்காப்புக் கொள்கைகளை மேம்படுத்தியது.

சீனாவால் உருவாகி உள்ள சவால்களைச் சமாளிக்க தனது தற்காப்புச் செலவினத்தை நேட்டோ கூட்டமைப்பின் தரத்தின் அளவுக்கு இரட்டிப்பாக்க அவை மேம்படுத்தப்பட்டன.

அதாவது, 2027ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 விழுக்காடு அளவுக்கு தற்காப்புச் செலவை அதிகரிப்பது அதன் நோக்கம்.

புதிதாக அங்கீகரிக்கப்பட்டு உள்ள 8.7 டிரில்லியன் யென், ஜப்பானின் சுய-தற்காப்புப் படைகளுக்கு ஆள் எடுப்பது போன்ற நடவடிக்கைகளுக்குக் கைகொடுக்கும். அத்துடன், அமெரிக்க, ஜப்பானிய ராணுவங்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தவும் அந்த நிதி பயனளிக்கும்.

குறிப்புச் சொற்கள்
ஜப்பான்வரவுசெலவுத் திட்டம்அமைச்சரவை