தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவுக்கான சில பொட்டல விநியோகச் சேவைகளை நிறுத்திய ஜப்பான்

2 mins read
ebfeb753-fe6e-450c-975d-88176844e077
உலக நாடுகளிலிருந்து வரும் சிறிய பொட்டலங்களுக்கான வரி விலக்கை அமெரிக்கா மீட்டுக்கொண்டது. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: அமெரிக்க அரசாங்கம் விதித்த புதிய வரிகளைத் தொடர்ந்து சிறிய பொட்டலங்களை அமெரிக்காவுக்கு அனுப்பும் சேவையை ‘ஜப்பான் போஸ்ட்’ நிறுவனம் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பு சிறிய வர்த்தகங்களையும் தனிநபர்களையும் எவ்வாறு பாதிக்கும் என்பதற்கு அறிகுறியாக அந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உலக நாடுகளிலிருந்து வரும் குறைந்த மதிப்புள்ள பொட்டலங்களுக்கான வரி விலக்கை அமெரிக்கா மீட்டுக்கொண்டதால் தபால் சேவை வழங்கும் நிறுவனம் $100 அமெரிக்க டாலர் மதிப்புள்ள சிறிய பொட்டலங்களை அனுப்பும் சேவையை ஆகஸ்ட் 27ஆம் தேதியிலிருந்து நிறுத்துவதாகக் குறிப்பிட்டது.

“விநியோக நிறுவனங்களுக்கும் தபால் சேவைகளுக்குமான நடைமுறைகள் புதிய வழிகாட்டிகளின்கீழ் தெளிவாகத் தெரியாததால் செயல்பாடுகள் அதிக சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றன. எனவே சிறிய பொட்டலங்கள் சேவையை நிறுத்துகிறோம்,” என்று ‘ஜப்பான் போஸ்ட்’ நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் சிறிய பொட்டலங்களுக்கு வரி விலக்கு இருந்ததால் அமெரிக்கப் பயனீட்டாளர்களால் வெளிநாடுகளிலிருந்து மலிவான விலையில் பொருள்களை வாங்க முடிந்தது.

2ஆம் தேதி சீனாவிலிருந்து வரும் சிறிய பொட்டலங்களுக்கான வரி விலக்கை மீட்டுக்கொண்ட அமெரிக்கா, உலகின் பிற நாடுகளுக்கும் அதை நீட்டித்தது.

ஃபென்டனைல் போன்ற சட்டவிரோத போதைப் பொருள்கள் அமெரிக்காவுக்குள் வருவதைத் தடுக்கும் நோக்கில் ஜூலை 30ஆம் தேதி திரு டிரம்ப் அதிபர் உத்தரவில் கையெழுத்திட்டதாகக் கூறினார்.

‘ஜப்பான் போஸ்ட்’ நிறுவனத்தைத் தவிர பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தேசிய தபால் சேவை நிறுவனங்கள் சிறிய பொட்டலங்களை அமெரிக்காவுக்கு அனுப்பப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளன.

தற்போதைக்கு, ‘ஜப்பான் போஸ்ட்’ நிறுவனம் அமெரிக்க சுங்கத் துறை விதிகளுக்கு உட்பட்ட விநியோகச் சேவைகளை அமெரிக்கப் பயனீட்டாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. எனினும், அதற்கான கட்டணம் சற்று கூடுதலாக இருக்கும்.

வர்த்தக அட்டைகள், தானியக்கப் பாகங்கள் ஆகிய பல ஜப்பானியப் பொருள்கள் அமெரிக்காவில் நன்றாக விற்பனையாகின என்று ஈபே வர்த்தகத் தளம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்